சென்னை: கடந்த மே 7ஆம் தேதி அன்று சென்னை மயிலாப்பூரில் வசித்து வந்த ஆடிட்டர் ஸ்ரீகாந்த் மற்றும் அவரது மனைவி அனுராதா ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர்.
இந்த கொலை வழக்கில் தொடர்புடைய அவ்வீட்டில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்த நேபாளத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் மற்றும் டார்ஜிலிங்கைச் சேர்ந்த அவனது கூட்டாளி ரவி ராய் ஆகியோரை சென்னை மாநகர காவல் துறையினர் ஆந்திர காவல் துறையினர் உதவியுடன் ஓங்கோலில் கைது செய்தனர்.
இருவரும் சேர்ந்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டு அவர்கள் கொலை செய்து புதைத்த இடத்தை அடையாளம் காட்டினர். மேலும் குற்றவாளிகளிடமிருந்து 1127 சவரன் தங்க நகைகள், 2 வைர மூக்குத்திகள், வெள்ளி நகைகள் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டன.
இக்கொலை வழக்கில் துரிதமாக செயல்பட்டு, குற்றவாளிகளைக் கைது செய்த மயிலாப்பூர் மாவட்ட காவல் துணை ஆணையர் திஷா மிட்டல், காவல் உதவி ஆணையர்கள் எம். குமரகுருபரன் மற்றும் டி.கௌதமன், காவல் ஆய்வாளர் திரு. எம். ரவி, உதவி ஆய்வாளர்கள் சி. கிருஷ்ணன், வி. மாரியப்பன், எம். அன்பழகன், காவலர் நிலை-I டி.சங்கர் தினேஷ், காவலர் எஸ். கதிரவன் ஆகியோரை தலைமைச்செயலகத்தில், இன்று (மே 11) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் அழைத்துப் பாராட்டினார்.
இந்நிகழ்வின்போது, உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச்செயலாளர் எஸ்.கே. பிரபாகர், காவல் துறை தலைமை இயக்குநர் செ. சைலேந்திர பாபு, சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், கூடுதல் காவல் ஆணையர் முனைவர் என். கண்ணன், காவல் இணை ஆணையர் (தெற்கு) பிரபாகரன், மற்றும் காவல்துறை உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
இதையும் படிங்க:மயிலாப்பூர் இரட்டை கொலை வழக்கில் 6 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்த காவல் துறைக்கு முதலமைச்சர் பாராட்டு...