தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தலைமைச் செயலகத்தில், சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மதுரை ராஜாஜி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகிய மூன்று மருத்துவமனைகளிலும் கட்டப்படவுள்ள தரை மற்றும் 6 தளங்கள் கொண்ட டவர் பிளாக் கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார். திருச்செந்தூர் மற்றும் பரமக்குடி அரசு மருத்துவமனைகளில் 10 கோடியே 92 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மருத்துவக் கட்டடங்களையும் திறந்து வைத்தார்.
சென்னை- கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2 லட்சத்து 68 ஆயிரத்து 817 சதுர அடி பரப்பளவில் தரைதளம் மற்றும் 6 தளங்களுடன் ரூ.135 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கட்டடத்தில், 12 அறுவை அரங்கங்கள் மற்றும் ஒரு ஹைப்ரிட் அறுவை அரங்கம், நரம்பியல், இதயம், எஸ்.ஜி.இ ( SGE ), சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை, எலும்பியல், பொது அறுவை சிகிச்சை, தீக்காயங்கள் மற்றும் நரம்பியலுக்கான ஹைப்ரிட் அறுவை அரங்கங்களைக் கொண்ட மேம்பட்ட அறுவை அரங்க வளாகம், தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள், அறுவை சிகிச்சைக்கு பிந்தைய பராமரிப்பு பிரிவு, நரம்பியல் தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் தீக்காய தீவிர சிகிச்சைப் பிரிவு அமைக்கப்படவுள்ளன.
இமேஜிங் மையம், அவசர சிகிச்சை பிரிவு மற்றும் சி.எஸ்.எஸ்.டி சேவைகள், புனரமைப்பு அறுவை சிகிச்சை வார்டு, எண்டோஸ்கோபி சூட், அல்ட்ரா சவுண்ட் ஆய்வகம் மற்றும் நச்சு சிகிச்சைப் பிரிவு, தீக்காயப் பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு, இருதய பிரிவு, நெப்ராலஜி பிரிவு, சிறுநீரக பிரிவு, டயாலிசிஸ் / சிஆர்ஆர்டி ஆகிய பிரிவுகள் செயல்படும். இக்கட்டடத்தில் 410 படுக்கைகள் நிறுவப்படும்.
மதுரை, இராஜாஜி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் , 2 லட்சத்து 43 ஆயிரத்து 61 சதுர அடி பரப்பளவில் தரை தளம் மற்றும் 6 தளங்களுடன் 121 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள டவர் பிளாக் கட்டடத்தில் 22 அறுவை அரங்கங்கள் மற்றும் ஒரு ஹைப்ரிட் அறுவை அரங்கம், இருதயம், வாஸ்குலர், பொது அறுவை சிகிச்சை, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை, காது மூக்கு தொண்டை, எலும்பியல், கண் மருத்துவம் மற்றும் இருதய / வாஸ்குலருக்கான ஹைப்ரிட் அறுவை சிகிச்சை அரங்கம் கொண்ட மேம்பட்ட அறுவை அரங்க வளாகம், தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள், அறுவை சிகிச்சைக்கு பிந்தைய பராமரிப்புப் பிரிவு, இமேஜிங் சென்டர் , சி.எஸ்.எஸ்.டி , அவசர சிகிச்சை துறை மற்றும் கேத் லேப் பிரிவு , இருதயவியல் , பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை , இருதயம் மற்றும் வாஸ்குலர் அறுவை சிகிச்சை ஆகிய வசதிகளுடன் செயல்படும் . இந்த டவர் பிளாக்கில் 205 படுக்கைகள் நிறுவப்படும்.
கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2 லட்சத்து 22 ஆயிரத்து 305 சதுர அடி பரப்பளவில் தரை தளம் மற்றும் 6 தளங்களுடன் 110 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள டவர் பிளாக் கட்டடத்தில், 9 அறுவை அரங்கங்கள் மற்றும் 2 ஹைப்ரிட் அறுவை அரங்கங்கள், பொது அறுவை சிகிச்சை , சி.டி.எஸ் , இரைப்பை குடல், எலும்பியல், தீக்காயம் மற்றும் சி.டி.எஸ் / வாஸ்குலர், நியூராலஜிக்கான ஹைப்ரிட் அறுவை அரங்க மையம் கொண்ட மேம்பட்ட அறுவை அரங்க வளாகம், தீவிர சிகிச்சைப் பிரிவு, சர்ஜிகல் தீவிர சிகிச்சைப் பிரிவு, அறுவை சிகிச்சைக்கு பிந்தைய பராமரிப்பு பிரிவு, அறுவை சிகிச்சைக்கு பிந்தைய மயக்க மருந்து பராமரிப்பு பிரிவு மற்றும் ஸ்டெப் - டவுன் தீவிர சிகிச்சைப் பிரிவு, இமேஜிங் மையம், அவசர சிகிச்சை பிரிவு, சி.எஸ்.எஸ்.டி மற்றும் ஆய்வகம், மருத்துவ இரைப்பை குடல், சர்ஜிக்கல் இரைப்பை குடல் மற்றும் சி.டி.எஸ் போன்ற புறநோயாளிகள் பிரிவுகள் , எண்டோஸ்கோபி சூட், பொது வார்டுகள், தீக்காய பிரிவு மற்றும் மருத்துவ இரைப்பை குடல் வார்டுகள் ஆகிய பிரிவுகள் செயல்படும். இந்த கட்டடத்தில் 232 படுக்கைகள் நிறுவப்படும்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் 5 கோடியே 76 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு தளங்களுடன் கட்டப்பட்டுள்ள 48 படுக்கைகள் கொண்ட அவசர சிகிச்சை பிரிவு, தீவிர மருத்துவ சிகிச்சைப் பிரிவு , நச்சு முறிவு சிகிச்சை மையம் , கண் அறுவை சிகிச்சை அரங்கம் மற்றும் அறுவை சிகிச்சைக்கு பிந்தைய கவனிப்புப் பிரிவு ஆகியவை உள்ளன.
ராமநாதபுரம் மாவட்டம் , பரமக்குடி அரசு மருத்துவமனையில் 5 கோடியே 16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு தளங்களுடன் கட்டப்பட்டுள்ள அவசர சிகிச்சைப் பிரிவு , அறுவை சிகிச்சை அரங்கம், 30 படுக்கைகள் கொண்ட வார்டு , ஆய்வகம் , இரத்த சுத்திகரிப்பு பிரிவு என மொத்தம் 10 கோடியே 92 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மருத்துவமனைக் கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர், முனைவர் ராஜீவ் ரஞ்சன், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்ட இயக்குநர் ஏ.சிவஞானம், மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் ஆர்.நாராயணபாபு, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் டாக்டர் குருநாதன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:மதுரை இராசாசி மருத்துவமனையில் ரூ.121 கோடியில் புதிய கட்டடத்திற்கு அடிக்கல்!