சென்னை: எழும்பூரில் உள்ள எஸ்டிஏடி வளாகத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ், ஹாக்கி யூனிட் ஆஃப் தமிழ்நாடு சங்கம் இயங்கி வருகிறது. இச்சங்கத்தின் சார்பில் சென்னை மயிலாப்பூரில் இயங்கிவரும் தனியார் வங்கியில் கணக்கு தொடங்கப்பட்டு சங்க செயலாளர், பொருளாளர் மூலம் நிதிநிலை பராமரிக்கப்பட்டு வருகின்றது.
2019ஆம் ஆண்டு புதிய நிர்வாகக் குழுவைத் தேர்ந்தெடுக்கும்பொருட்டு தேர்தல் நடைபெற்றது. இதில் வெற்றிபெற்று சேகர் மனோகரன் தலைவராகவும், ரேணுகா லட்சுமி செயலாளராகவும், ராஜராஜன் பொருளாளராகவும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
சங்க வளர்ச்சிக்காக அரசு மூலம் 10 லட்சம் ரூபாய் வளர்ச்சி நிதியாக சங்கத்தின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது. இந்நிலையில், முன்னாள் பொருளாளர் செந்தில் ராஜ்குமார், தற்போதைய தலைவர் சேகர் மனோகரன், பொருளாளர் ராஜராஜன் ஆகியோர் இணைந்து சங்க வளர்ச்சி நிதியில் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பாக அந்தப் புகாரில் வங்கி மேலாளரிடம் புதிய நிர்வாகக் குழுவின் தேர்வு பற்றிய உண்மையைக் கூறாமல், பழைய காசோலையைப் பயன்படுத்தி வங்கியை ஏமாற்றி பணத்தை அபகரித்துக் கொண்டதாக, சங்க உறுப்பினர்கள் மாரீஸ்வரன், ராணி ஆகியோர் சென்னை மத்தியக் குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளனர்.
இந்நிலையில், நீதிமன்ற உத்தரவின் பேரில் ஹாக்கி யூனிட் ஆஃப் தமிழ்நாடு சங்கத்தின் தலைவராக உள்ள மனோகரன் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் மீது மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளது. ஹாக்கி சங்கத் தலைவர் சேகர் மனோகரன், பொதுச் செயலாளர் ரேணுகாலட்சுமி ராஜராஜன், செந்தில்ராஜ்குமார் ஆகிய மூவர் மீது ஐ.பி.சி 409, 420, 120B ஆகியப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஹாக்கி சங்க நிர்வாகத்தில் புதிய நிர்வாகம் பொறுப்பேற்றும் கூட வங்கிக்கு அதன் தகவலைக் கொடுக்காமல், பழைய நிர்வாகிகளைச் சேர்த்துக்கொண்டு அரசுப் பணத்தை களவாடியது, மொத்த நிர்வாகிகளையும் அழைக்காமல் பொதுக்குழுவை நடத்தி போலிக் கணக்குக் காட்டியது போன்றக் குற்றச்சாட்டுகளும் மனோகரன் மீது சுமத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தேர்வர்களுக்கு இலவச பயிற்சி!