பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை, பூலாம்பாடி, கடம்பூர், அரசடிகாடு, புதூர் மற்றும் மேலகுணங்குடி ஆகியப் பகுதிகளை உள்ளடக்கியது. இதில் பூலாம்பாடி பேரூராட்சியில் 15 வார்டுகளும் 10ஆயித்திற்கும் மேற்பட்ட பொதுமக்களும் வசித்து வருகின்றனர். இப்பேரூராட்சி பகுதிகளில் சாலை, குடிநீர், மின்விளக்கு மற்றும் கழிவு நீர் போன்ற அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாமல் இருந்தது.
மேலும், மலையடிவாரப்பகுதியான அரசடிகாடு பகுதியில் போதிய சாலை வசதி இல்லாததால் விவசாயிகள் விளைபொருட்களை வாகனங்களில் ஏற்றிச்செல்ல மிகவும் அவதிப்பட்டு வந்தனர். அடிப்படை வசதி பற்றாக்குறையால் மிகவும் சிரமத்தை சந்தித்து வந்த பொதுமக்கள், பூலாம்பாடி பேருராட்சிப்பகுதிகளில் அடிப்படை வசதி செய்து தருமாறு மலேசியாவைச் சார்ந்த பன்னாட்டு தொழிலதிபரும் பூலாம்பாடியைப் பூர்வீகமாகக்கொண்ட டத்தோ பிரகதீஸ்குமார் என்பவரிடம் வேண்டுகோள் விடுத்தனர்.
பொதுமக்களின் சிரமங்களைக் கேட்டறிந்த அவர், பொதுமக்கள் பங்களிப்புத்தொகையுடன் 'நமக்கு நாமே திட்டத்தின்கீழ்' அடிப்படை வசதிகள் செய்து தர முன் வந்தார். அதற்கான முயற்சிகளையும் அரசு அலுவலர்களுடன் இணைந்து முழுவீச்சில் ஆரம்பித்தார், டத்தோ S.பிரகதீஸ்குமார். அனைத்து வீதிகளிலும் பொதுமக்களுக்குத்தேவையான அடிப்படை வசதிகளைக் கண்டறியச்சொல்லி அதற்கான செலவீனங்களையும் கேட்டறிந்தார்.