சென்னை: திருத்தப்பட்ட நிதி மற்றும் வேளாண் அறிக்கை மீதான பொது விவாதம் கடந்த திங்கள்கிழமை முதல் தொடங்கி இன்று (ஆகஸ்ட் 18) மூன்றாவது நாளாக நடைபெற்றுவருகிறது. சட்டப்பேரவைக் கூட்டம் இன்று தொடங்கியதும் கொடநாடு விவகாரத்தில் பொய் வழக்குப் போடுவதாக திமுக அரசைக் கண்டித்து கண்டன முழக்கமிட்டு அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதோடு வெளிநடப்புச் செய்தனர்.
இந்த நிலையில், திமுக சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தனது பேச்சின்போது நீட் தேர்வுக்கான ஒரு இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் எனவும், எனவே அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய நீட் தேர்வை ரத்துசெய்ய வேண்டும் என்றும் கோரிக்கைவிடுத்தார்.
நடப்புக் கூட்டத் தொடரிலேயே நீட்டுக்குச் சட்ட முன்வடிவு
இதற்குப் பதில் அளித்துப் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "நீட் தேர்வு விவகாரத்தைப் பொறுத்தவரை கட்சிப் பாகுபாடுகளையெல்லாம் மறந்து அனைவரும் ஒன்றுசேர்ந்து அதற்காக குரல் கொடுக்க வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம்; அதில் எந்த மாற்றமும் கிடையாது.
அந்த அடிப்படையிலேதான் தேர்தல் நேரத்தில் நாங்கள் உறுதிமொழி தந்தோம். திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்தவுடன் நீட்டுக்கு விலக்குப் பெறுவதுதான் நமது லட்சியமாக இருக்கும், அது குறித்து நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என உறுதிமொழி அளித்திருக்கிறோம்.
அதனால்தான் ஆட்சிக்கு வந்தவுடனேயே, 'இதுபற்றி அலசி ஆராய்ந்து ஒரு ஆய்வு அறிக்கையை பொதுமக்களிடம் கருத்துகளைக் கேட்டு நீங்கள் வழங்கிட வேண்டும்' என்று சொல்லி ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே. ராஜன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு அவர்களும் அந்தப் பணியை நிறைவேற்றி அந்த அறிக்கையைத் தந்திருக்கிறார்கள்.