சென்னை:உலக அளவிலான 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான தொடக்கவிழா இன்று நடைபெற உள்ள நிலையில் நேரு உள்விளையாட்டு அரங்கம் விழாக்கோலம் பூண்டுள்ளது. மேலும் மாமல்லபுரத்தில் விளையாட்டு ஏற்பாடுகளுக்காக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னையில் முதன் முறையாக நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டியை மக்கள் நேரடியாக காண வழிவகை செய்யப்பட்டுள்ளது.இதனை செஸ்பேஸ் இந்தியா என்ற யூட்யூப் சேனலில் காணலாம்.
187 வெவ்வேறு நாடுகளில் இருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் இப்போட்டியில் பங்கேற்க உள்ளனர். ஜூலை 29 அன்று தொடங்கி ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை போட்டி நடைபெறுகிறது. சென்னை கிழற்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள மகாபலிபுரம் ரிசார்ட் மற்றும் கன்வென்சன் சென்டரில் போட்டிகள் நடைபெறும்.
எந்த பக்கம் திரும்பினாலும் சர்வதேச செஸ் போட்டி குறித்த விளம்பர பதாகைகளும், சுவர் ஓவியங்களும், காணப்படுகிறது. துறை வாரியாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து உள்ளது. அதன்படி, பொதுப்பணி துறையின் மூலமாக ரூபாய் 53 கோடி செலவீட்டில் OMR மற்றும் ECR சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.