அதிமுகவிலிருந்து டிடிவி தினகரன் கழற்றிவிடப்பட்டதை அடுத்து அவரது நிழலாக தங்க தமிழ்ச்செல்வன் செயல்பட்டு வருகிறார். அவர் தனக்கு காட்டும் விசுவாசத்திற்கு கைமாறாக நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிட அவருக்கு டிடிவி வாய்ப்பளித்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் தோல்வியடைந்தார். இருப்பினும் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தனக்கு போட்டியிட விருப்பமில்லை அதுமட்டுமில்லாமல் செலவு செய்யப் பணமுமில்லை என அவர் கூறியதாகவும் தகவல் கசிந்தது.
இது இப்படி இருக்க, தினகரன் மீது தங்க தமிழ்ச்செல்வன் அதிருப்தியில் இருப்பதாகவும் அவர் அமமுகவிலிருந்து விலகி விரைவில் அதிமுகவில் இணைய இருப்பதாகவும் தகவல் வெளியானது. ஆனால் அதனை அவர் மறுத்து வந்தார். மேலும், சமீபத்தில் சென்னையில் உள்ள பிரபலமான ஹோட்டல் ஒன்றில் தங்க தமிழ்ச்செல்வனை அமைச்சர்கள் இரண்டு பேர் சந்தித்ததாகவும், ஈபிஎஸ்ஸிடம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கித் தருகிறோம் என அவர்கள் கூறியதாகவும் தகவல் வெளியானது. இதனையும் அவர் திட்டவட்டமாக மறுத்தார். ஆனால், மக்களவைத் தேர்தல் முடிவுகளும், சட்டப்பேரவை இடைத்தேர்தல் முடிவுகளும் தங்க தமிழ்ச்செல்வனுக்கு ஏமாற்றத்தையே அளித்திருக்கிறது.
அதுமட்டுமின்றி இனியும் தினகரனோடு இணைந்து செயல்பட்டால் இருக்கும் பணத்தையும் இழந்து, கொஞ்ச நஞ்சம் இருக்கும் அரசியல் எதிர்காலத்தையும் இழந்துவிடுவோம் என அஞ்சும் தங்கம் விரைவில் அக்கட்சியிலிருந்து வெளியேறுவார் என பலர் கூறினர். இதனால் அமமுக கூடாரத்தில் விரைவில் பெரும் புயல் ஒன்றும் உருவெடுக்க வாய்ப்பிருப்பதாகவே தெரிகிறது.
இதற்கிடையே இன்று மாலை தனியார் விடுதியில் தங்க தமிழ்ச்செல்வன் நகரம் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடத்துவதாக தெரிவித்திருந்த நிலையில். தங்க தமிழ்ச்செல்வன் நடத்தும் ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்து டிடிவி தினகரனை சந்திப்பதற்கு நிர்வாகிகள் சென்னை சென்றுவிட்டனர். மேலும், கூட்டத்திற்காக பழனிசெட்டிபட்டியில் உள்ள விடுதிக்கு வந்த தங்க தமிழ்செல்வன் சில நிமிடங்களிலே அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டார்.