சென்னை:நாடு முழுவதும் இளங்கலை மருத்துவம், பல் மருத்துவப் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான நீட் தேர்வு செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தேர்வுக்கூட நுழைவுச்சீட்டில் பல்வேறு கட்டுப்பாடுகளை தேசிய தேர்வு முகமை மாணவர்களுக்கு வழங்கி உள்ளது.
2020 - 2021ஆம் கல்வியாண்டில் நீட் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டில் பல்வேறு விதிமுறைகளை தேசிய தேர்வு முகமை அச்சிட்டு வெளியிட்டுள்ளது.
மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு காலை 11 மணிமுதல் மதியம் 1.30 மணிக்குள் தேர்வு மையத்திற்குள் வருகைபுரிய வேண்டும். எழுத்துத் தேர்வு மதியம் 2 மணிமுதல் 5 மணி வரையில் நடைபெறும்.
மாணவருக்கு கரோனா அறிகுறிகள் 14 நாள்களுக்கு முன்னர் இருந்ததா என்பதையும், அவர்கள் தேர்வு மையத்திற்கு வருவதற்கு முன்னர் எந்த நகரத்திலிருந்து வந்தனர் என்ற விவரத்தையும் பதிவுசெய்ய வேண்டும்.
தேர்வர்களுக்கான முக்கிய அறிவுரைகள்
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும்பொழுது பயன்படுத்திய வண்ணப் புகைப்படம் (4"× 6") போன்ற மற்றொரு புகைப்படத்தை உங்களுடைய அனுமதிச் சீட்டில் ஓட்ட வேண்டும்.
அறை கண்காணிப்பாளர் உங்களுடைய அனுமதிச் சீட்டில் ஒட்டப்பட்டுள்ள வண்ணப் புகைப்படத்தை நீங்கள் முன்பே விண்ணப்பத்தில் ஒட்டியுள்ள வண்ணப் புகைப்படத்துடன் ஒப்பிட்டுச் சரி பார்ப்பார்.
நீங்கள் உங்களுடைய அனுமதிச் சீட்டில் ஓட்டும் புகைப்படத்தில் இடதுபுறம் நீங்கள் கையொப்பமிட வேண்டும். அதே போன்று அறை கண்காணிப்பாளர் உங்கள் புகைப்படத்தின் வலதுபுறம் கையெழுத்திடுவார்.
தேர்விற்குச் செல்லும்பொழுது கண்டிப்பாக இந்த நுழைவுச்சீட்டை எடுத்துச் செல்ல வேண்டும் இல்லாவிட்டால் நீங்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டீர்கள். தேர்வு முடிந்த பிறகு கண்டிப்பாக நுழைவுச்சீட்டை அறை கண்காணிப்பாளரிடம் ஒப்படைத்துவிட்டு திரும்ப வேண்டும்.
குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் வந்தால் அனுமதி கிடையாது.
அனைத்து மாணவர்களும் தங்களுடைய நுழைவுச் சீட்டில் கொடுக்கப்பட்டுள்ள நேரத்திற்கு முன்பாகச் சரியாகத் தேர்வு மையத்தை சென்றடைய வேண்டும். (கோவிட்-19 சார்பாக அனைத்துவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சார்ந்து)
தேர்வு மையத்திற்கு குறிப்பிட்ட நேரத்தில் சென்றடையா விட்டால் கண்டிப்பாகத் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டீர்கள்.
தேர்வு முடிவடைந்த பிறகு அறை கண்காணிப்பாளர் உங்களுக்குச் சரியான அறிவுரைகள் வழங்கும்வரை யாரும் தேர்வு அறையைவிட்டு வெளியில் வரக் கூடாது.
தேர்வு முடிந்த பிறகு எந்த ஒரு காரணம் கொண்டும் தேர்வறையில் எழுந்து நிற்பதோ, தேர்வு அறையை விட்டு வெளியே வர முயற்சி செய்வதோ தவிர்க்கப்பட வேண்டும்.
அனுமதிச் சீட்டை கண்டிப்பாக எடுத்துச் செல்ல வேண்டும், இல்லாவிடில் தேர்விற்கு அனுமதிக்கப்பட மாட்டடீர்கள்.
நீட் தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களும் தேர்விற்கு முதல் நாளே தேர்வு மையத்தைப் பார்வையிட்டு தங்களுக்குரிய மையம் சரியானதா என்பதைச் சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
மதம் சார்ந்த உடைகளை அணிந்து செல்லக்கூடிய மாணவியர், கண்டிப்பாகத் தேர்விற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாகவே தேர்வு மையத்தை சென்று அடைந்து தங்களை கோவிட் -19 சார்பான சோதனைகளுக்கு உட்படுத்திக்கொள்வதற்கு ஏதுவாகத் தேர்வு மையத்தைச் சென்றடைய வேண்டும்.
மேலும் மாணவர்கள் தேர்வுக்குச் செல்லும்பொழுது அனுமதிச் சீட்டுடன் தங்களின் ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், குடும்ப அட்டை, கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்), நிரந்தர கணக்கு எண் அட்டை (பான் கார்டு), பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு நுழைவுச்சீட்டு போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை உடன் எடுத்துச் செல்ல வேண்டும்.
தேர்வு மையத்தில், தேர்வு அறைக்குள் நுழைவதற்கு முன்பாக உலோக சோதனைக் கருவி மூலம் கண்டிப்பாகச் சோதனையிடப்படுவீர்கள்.
தேர்வு மையத்திற்குள் மின்சாதனப் பொருள்கள், செல்போன் உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட பொருள்களைக் கொண்டுசெல்லக் கூடாது.
தேர்வர்கள் ஆடை கட்டுப்பாடுகளைப் பின்பற்றுவதுடன், ஷூ, சாக்ஸ் அணியவும் தடைவிதிக்கப்படுகிறது. தேர்வு மையத்திற்குள் எந்தத் தாளையும் எடுத்துச் செல்ல தடைவிதிக்கப்படுகிறது.
தேர்வர்கள் தகுந்த இடைவெளியினைப் பின்பற்றி தேர்வு மையத்திற்குள் செல்ல வேண்டும்.