சென்னை மாநகராட்சி சார்பில் மாநகரில் சுற்றுச்சூழலை பேணிகாக்கவும், பொதுமக்களின் பொழுதுபோக்கிற்காகவும், 704 பூங்காக்கள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
இவற்றில் 540 பூங்காக்கள் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ஒப்பந்த அடிப்படையில் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. ஒப்பந்த அடிப்படையில் தனியாரிடம் பராமரிப்பிலுள்ள பூங்காக்களில் ஒப்பந்ததாரர்கள் கோடைகாலங்களில் 30 நாட்களுக்கு ஒரு முறையும் குளிர்காலம் மற்றும் மழை காலத்தில் 15 நாட்களுக்கு ஒரு முறையும் புல்வெளிகளை வெட்டி பராமரிக்க வேண்டும்.
ஏழு நாட்களுக்கு ஒருமுறை அல்லது தேவையான நேரத்தில் புல்வெளிகளுக்கிடையேயான களைகளை அகற்ற வேண்டும். 15 நாட்களுக்கு ஒரு முறை நடைபாதை மற்றும் செடி, கொடிகளை சரியான அளவில் வெட்டி பராமரிக்க வேண்டும். செடிகளின் வார்ச்சியை பொறுத்து தேவையான பொழுது வெட்டி பராமரிக்க வேண்டும் என மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
மேலும், ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி தகுதியுடைய பணியாளர்கள் தேவையான எண்ணிக்கையில் பணியில் நாள்தோறும் இருக்க வேண்டும். பார்வையாளர்கள் புகார்களை தெரிவிக்க ஒவ்வொரு பூங்காவிலும் புகார் பதிவேடு இருக்க வேண்டும்.