சென்னை, கோவை மாநகராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் உள்கட்டமைப்புப் பணிகளுக்கு கோரப்பட்ட டெண்டரில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் அமைச்சர் வேலுமணி தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, நெருங்கியவர்களுக்கு ஒப்பந்தத்தை வழங்கியதால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் இது குறித்து நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரிக்க உத்தரவிடக் கோரி அறப்போர் இயக்கம், திமுக எம்.பி. ஆர்.எஸ். பாரதி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த மனுக்களுக்கு பதிலளிக்கும்படி, உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு, நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி அமர்வு உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, அமைச்சர் வேலுமணி தரப்பில் இன்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், மாநகராட்சி டெண்டர் முறைகேடுகளுக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனத் தெரிவித்துள்ளார். அமைச்சர் என்ற முறையில் கொள்கை முடிவுகளை மட்டுமே எடுப்பதாகவும் மாநகராட்சி டெண்டர் நடைமுறைகளில் தலையிடுவதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
டெண்டர்களில் முறைகேடு குற்றச்சாட்டுகளைப் பொறுத்தவரை, சம்பந்தப்பட்ட மாநகராட்சிகள்தான் எதிர்கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளார். தமிழ்நாடு அரசின் சட்ட திட்டங்களுக்குள்பட்டு டெண்டர்கள் வழங்கப்படுவதாகவும் எதிர்க்கட்சிகளின் தூண்டுதலில் தனது புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் கோரியுள்ளார்.