சென்னை:அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு அதிகாரி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்தப் புகாரில் தங்களது தூதரகத்தில், அமெரிக்கா சென்று படித்து வருவதற்காக மாணவர் விசா பெறுவதற்காக தெலங்கானாவைச் சேர்ந்த கர்ணம் சாய் திலீப் என்பவர் விண்ணப்பித்தார்.
பின்னர் சென்ற வெள்ளிக்கிழமை (மே 20) நடைபெற்ற நேர்க்காணலுக்கு கர்ணம் வந்திருந்ததாகவும், அப்பொழுது கர்ணம் சாய் திலீப் சமர்ப்பித்த ஆவணங்கள் போலியானது என தெரியவந்ததாகவும், எனவே கர்ணம் சாய் திலீப் மற்றும் அவர் சமர்ப்பித்த ஆவணங்களை ஒப்படைத்துள்ளதாகவும் புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
அவர் கொடுத்த புகாரின் மீது மத்திய குற்றப்பிரிவு மோசடி புலனாய்வு பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணை மேற்கொண்டதில், கர்ணம் சாய் திலீப் என்பவர், அமெரிக்கா சென்று படிப்பதற்காக மாணவர்கள் விசா பெற விண்ணப்பித்ததும், சென்னை அமெரிக்கா தூதரகத்தில் நேற்று (மே.21) நடைபெற்ற நேர்க்காணலின் போது, கர்ணம் சாய் திலீப் சமர்ப்பித்த கல்வி சான்றிதழ்கள் அனைத்தும் போலி என்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து தெலங்கானா விகாராபாத் பகுதியைச் சேர்ந்த கர்ணம் சாய் திலீப் என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கர்ணம் சாய் திலீப் விசாரணைக்குப் பின்னர், நேற்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையும் படிங்க:திருநெல்வேலி கல்குவாரி விபத்து - குவாரி உரிமையாளர் மற்றும் அவரது மகன் கைது