சென்னையில் இன்று அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அதிமுக முக்கிய அமைச்சர்கள், நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலை அணுகுவது குறித்து கூட்டணி கட்சிகளுடனும், மாவட்டச் செயலாளர்களுடனும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தக் கூட்டம் முடிந்த பிறகு அமைச்சர் ஜெயக்குமார், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது பேசிய அவர், உள்ளாட்சித் தேர்தலை நடத்தியே தீரவேண்டும் என்பது தான் அதிமுகவின் நிலைப்பாடாக இருப்பதாகவும் தேர்தலை நிறுத்த வேண்டும் என்பது தான் திமுகவின் நிலைப்பாடாக இருப்பதாகவும் அதிமுக உள்ளாட்சி தேர்தலை நடத்துவதில் சூப்பர் ஃபாஸ்ட் முறையில் செயல்படுவதாகவும் கூட்டணிக் கட்சிகளுடன் அடுத்தடுத்த பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாதது போல ஸ்டாலின் பேசுவதாகவும் ; உள்ளாட்சித் தேர்தல் நடைபெறக்கூடாது என்பது தான் ஸ்டாலினின் உள்ளார்ந்த எண்ணம் என்றும்; திமுக தற்போது குழப்பமாக இருக்கிறது என்றும் கூறினார்.
மேலும் அமைச்சர் ஜெயக்குமார், எல்லா நேரங்களிலும் அறிவாலயத்தில் கூட்டம் நடத்தும் திமுக ராசியில்லை என்று நினைத்து மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை வேறு இடத்தில் நடத்துகிறது என்றும்; திமுக தற்போது சென்டிமென்ட் கட்சியாக மாறிவிட்டதாகவும் கூறினார்.