இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் மயில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயதைத் திடீரென 58 லிருந்து 59 ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ள செயல், இளைஞர்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கும் நடவடிக்கை ஆகும்.
ஏற்கனவே அரசுப்பணியை எதிர்நோக்கி வேலை வாய்ப்பகங்களில் பதிவு செய்திருக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை சுமார் 1 கோடி. அதேபோன்று இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று லட்சக்கணக்கானோர் ஆசிரியர் பணியை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
மாநிலம் முழுவதும் அரசுத்துறைகளில் லட்சக்கணக்கான பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த நிலையில், அரசு எடுத்துள்ள இந்த முடிவானது எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும். இந்தாண்டு 58 வயது முடிந்து பணி ஓய்வு பெறுபவர்களுக்கு பணப்பலன்கள் கொடுப்பதைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கையாகவே இது தெரிகிறது.