சென்னை:பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று நடந்த கணித பாட தேர்வு கடினமாக இருந்ததாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இதுவரை நடந்த தேர்வுகள், பெரிய அளவிற்கு மாணவர்களுக்கு கடினமாக இருக்கவில்லை. ஆனால் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, நேற்று (மே 24)நடந்த கணக்கு பாட தேர்வு கண்ணீரை வர வைத்து விட்டதாக ஆசிரியர்களே குமுறுகின்றனர்.
ஒரு மதிப்பெண் மற்றும் வரைபடம் போன்றவை தவிர்த்து மற்ற அனைத்து கேள்விகளும் மிக கடினமாக இருந்ததாக தெரிகிறது. ஐந்து மதிப்பெண் பகுதியில் 14 கேள்விகள் தரப்பட்டு, பத்து கேள்விகளுக்கு விடை எழுதவேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதில் 42 வது கேள்வி பழைய பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்பட்டுள்ளது. மேலும் 14 கேள்விகளில், 5 கேள்விகள் மட்டுமே விடையளிக்கும் வகையில் இருந்ததாகவும் ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
இரு மதிப்பெண் பகுதிகளில் 14 கேள்விகள் தரப்பட்டு, 10 கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டும் . இதிலும் 5 கேள்விகளுக்கு மட்டுமே விடையளிக்கும் வகையில் இருந்ததாகவும், மீதமிருந்த 10 கேள்விகளும் எழுத முடியாத அளவிற்கு இருந்ததாகவும் ஆசிரியர்களும், மாணவர்களும் தெரிவிக்கின்றனர்.