சென்னை:தமிழ்நாட்டில் சமீபத்தில் அரசுப்பள்ளி மாணவர்கள் பேருந்துகளில் கலாட்டா செய்தது, ஆசிரியரை கத்தியால் குத்த முயன்ற சம்பவம், பள்ளிகளில் ஆசிரியர்களிடம் வன்முறையாக நடந்துக் கொள்வது போன்றவை அதிகரித்து வருகிறது. மேலும், மாணவர்களை அடித்தாலோ பெற்றோர்கள் ஆசிரியர்களிடம் நேரில் பிரச்சனை செய்கின்றனர். இதனால் ஆசிரியர்கள் தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என கேட்கும் நிலைமையும் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் கூறும்போது, "தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் ஒழுக்க குறைபாடான செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர்கள் பேருந்துகளில் ஒழுக்க குறைவான செயல்பாடுகளில் ஈடுபடுவது, வழிபறிகளில் ஈடுபடுவது, மது அருந்துவது போன்ற ஒழுக்கக் கேடான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆசிரியர்களுக்கு ஒத்துழைக்கவும்: பள்ளிகளில் ஆசிரியர்களை தாக்குவது, மது அருந்திவிட்டு பள்ளிக்கு வருவது, பேருந்துகளில் பொருள்களை சேதப்படுத்துவது, அரசின் பொருள்களை சேதப்படுத்துவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இவற்றை அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். இதுபோன்ற மாணவர்களை தனியாக கண்டறிந்து நல்லொழுக்கத்தை கற்பிக்க வேண்டும்.
ஒவ்வொரு ஒன்றியத்திலும் தனியாக ஆலாேசகர்களை நியமனம் செய்து மாணவர்களுக்கு ஆற்றுப்படுத்துதல் பயிற்சியை அளிக்க வேண்டும். நல்ல ஆலோசனைகளை வழங்கி சமூகத்தில் நல்லவர்களாக உருவாக்கவும், காவல் துறையுடன் இணைந்து செயல்பட வேண்டும். மேலும் தடைச் செய்யப்பட்ட பொருட்களான குட்கா, பான்பராக் , கஞ்சா போன்றவை பள்ளிக்கு அருகில் விற்கப்படுவதை பார்க்கிறோம்.
மேலும் பேருந்துகளில் மாணவிகள் மது அருந்துவதையும் பார்க்கிறோம். பள்ளிகளில் மாணவர்களை கண்டிக்க இயலவில்லை. அரசு உடனடியாக தலையிட்டு, காவல் துறையும், சமூக நலத்துறையும் இணைந்து ஆசிரியர்களுடன் ஒத்துழைப்புடன் நல்வழிப்படுத்துப்பட வேண்டும்" என கூறினார்.