இது தொடர்பாக தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில பொதுச்செயலாளர் மனோகரன் தேர்வுத்துறை இயக்குநருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில், ” பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வும் அதனைத் தொடர்ந்து 11,12ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியும் தொடங்க இருப்பதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அறிவித்துள்ளார். இப்பணியை தொடங்கும் முன்பே அரசும், தேர்வுத்துறையும் சில சிறப்பு முன்னேற்பாடுகளை செய்துதர வேண்டும். அதன்படி,
- விடைத்தாள் திருத்தும் மையங்களை தகுந்த இடைவெளியைப் பின்பற்றி அமைத்திடல் வேண்டும்.
- தலைமைத் தேர்வர், மதிப்பெண் கூட்டுநர், உதவித் தேர்வர் என ஒவ்வொரு குழுவிற்கும் தனித்தனி அறைகள் அமைத்திட வேண்டும்.
- ஒவ்வொருவருக்கும் தனித்தனி இருக்கை வசதி ஏற்படுத்திட வேண்டும்.
- கடந்த ஆண்டுகள் போல் இல்லாமல், தேர்வு மையங்களை விரிவுப்படுத்தி, தாலுகாவிற்கு ஒரு தேர்வு மையம் என அமைத்திடல் வேண்டும்.
- ஆசிரியர்களின் இருப்பிடத்தைக் கணக்கில் எடுத்து அருகாமை மையத்தில் பணி செய்ய அனுமதிக்க வேண்டும்.
- விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கும் வழக்கமான நேரமான காலை 8.30 என்பதை 9.30 என மாற்றி, மாலை 4 மணிக்கு கண்டிப்பாக முடித்து விட வேண்டும்.
- விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு வந்து செல்ல தேர்வுத்துறையே போக்குவரத்து வசதியை ஏற்பாடு செய்ய வேண்டும்.
- எக்காரணம் கொண்டும் விடைத்தாள் எண்ணிக்கையை கூட்டித் தரவோ, கூடுதல் விடைத்தாள் திருத்தும்படியோ நிர்பந்திக்கக் கூடாது.
- ஆசிரியர்கள் அனைவருக்கும் முகக்கவசம், கையுறை, கிருமி நாசினி உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளை செய்து தர வேண்டும்.
- ஒவ்வொரு மையத்திலும் மருத்துவக்குழு அமைத்து நாள்தோறும் கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
- பல ஆண்டுகளாக விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஊதியம் உயர்த்தப்படாததால், உழைப்பூதியம் உள்ளிட்ட அனைத்தையும் இரட்டிப்பாக்கித் தர வேண்டும்.