தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

30 கி.மீ தொலைவில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி - ஆசிரியர் சங்க தலைவர்

சென்னை: கிராமங்களில் குறைந்தபட்சம் 10 கி.மீ தொலைவிலிருந்து 30 கி.மீ தொலைவில் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் இருக்கின்றன என தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.கே. இளமாறன் கூறியுள்ளார்.

pk ilamaran

By

Published : Aug 21, 2019, 8:27 PM IST

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட அரசாணையில் உயர்நிலை மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் செயல்பட்டுவரும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுடன் இணைக்கப்படும். தொடக்க, நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்களின் அதிகாரம் பறிக்கப்படுவதோடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பணிச்சுமை கூடுதலாக்கப்படுகிறது. மேலும் ஈராசிரியர் பள்ளிகளாக செயல்படும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் அருகிலுள்ள உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் இணைக்கப்படுவதால் கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.

கிராமத்தில் நூறு குடும்பங்கள் வசிக்கின்றன என்றால் பள்ளி வயது குழந்தைகள் 15-லிருந்து 20வரைதான் இருப்பார்கள். அதிலும் வசதி படைத்தவர்களின் குழந்தைகள் 3லிருந்து 6 பேர் தனியார் பள்ளிக்கு சென்றுவிடுவார்கள். மீதமிருக்கின்ற குழந்தைகளை படிக்க வைப்பதற்கான ஓராசிரியர், ஈராசிரியர் பள்ளிகள் தொடங்கப்பட்டன.

இந்நிலையில் கிராமப்புறங்களில் செயல்படும் ஈராசிரியர் பள்ளிகளை உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளுடன் இணைக்கும்போது தொடக்கப் பள்ளி மாணவர்கள் கல்வியை தொடர முடியாமல்போகும். கிராமங்களில் குறைந்தப்பட்சம் 10 கிலோ மீட்டர் தொலைவிலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் இருக்கின்றன.

அரசாணையில் குறிப்பிட்டுள்ளபடி பள்ளிகள் இணைப்பதன் மூலம் தொடக்கப் பள்ளி மாணவர்கள் அறிவியல் ஆய்வகம், ஸ்மார்ட் கிளாஸ் நூலகம் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறுவதுடன் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் பயிற்சிக்கோ, விடுப்பிலோ சென்றால் அந்த வகுப்புகளை உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் கவனிப்பார்கள் என்பது ஏற்புடையதல்ல.

தொடக்கப் பள்ளிக் குழந்தைகளின் மனநிலை வேறு, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் மனநிலை வேறு இரண்டையும் ஒப்பீடு செய்யமுடியாது. குழந்தைகளின் மன நலம் பாதிக்கும். ஆட்குறைப்பு நடவடிக்கை காரணமாக பள்ளிகளை ஒருங்கிணைக்கிறோம் என்ற பெயரில் தொடக்கக் கல்வித் துறையினை நிரந்தரமாக மூடிடும் முயற்சியினை கைவிட்டு தொடக்கக் கல்வியினை மேம்படுத்திடவும் தொடக்கப் பள்ளிகளுக்கு அடிப்படை வசதி உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட வேண்டும்” என கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details