சென்னை: தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொது செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் மற்றும் தொடக்கக்கல்வித்துறை இயக்குனருக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், "புதிய அரசு பொறுப்பேற்று , எந்த வித லகரங்களுக்கும் இடம் அளிக்காமல், கடந்த ஆண்டு நேர்மையான முறையில் கல்வித்துறை பொது மாறுதல் கலந்தாய்வை நடத்தியது.
அதே வேளையில் இந்த கல்வியாண்டின் தொடக்கத்தில் உயர்நிலை, மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கலந்தாய்வு மட்டுமே நடைபெறும் என்ற அறிவிப்பு அனைவரிடமும் அதிர்ச்சியையும் மன உலைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும், கடந்த காலங்களில் மாறுதல் கலந்தாய்வுகளுக்கான அட்டவணையை கல்வித்துறை வெளியிடும் போது, முதல் பொது மாறுதல் கலந்தாய்வை முன்னிறுத்தி பின்பு பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறும். கலந்தாய்வு அட்டவணை எவருக்கும் பாதிப்பு இல்லாமல் வெளியிடப்படும்.
ஆனால் இந்த கல்வியாண்டில் மட்டும் பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறும் என்ற அறிவிப்பு நடைமுறைக்கு அப்பாற்ப்பட்டு பொது மாறுதல் கலந்தாய்வை புறந்தள்ளி, பதவி உயர்வு கலந்தாய்வை முன்னிறுத்துவது ஏற்புடையது அல்ல. மேலும், எமிஸ் மூலம் கலந்தாய்வு நடைபெறும்போது அரசுக்கு எந்தவித பொருள் செலவோ இழப்பீடோ எதுவும் இல்லை. அதனால், ஆசிரியர்களின் பணி அவர்களின் மனநிலை, மற்றும் குடும்ப சூழ்நிலை ஆகியவைகளை கருத்தில் கொண்டு முதலில் பொது மாறுதல் கலந்தாய்வை நடத்தி, பின்பு பதவி உயர்வு கலந்தாய்வை நடத்த வேண்டும்.