தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஆசிரியர்களுக்கு ஜீரோ கலந்தாய்வு இல்லை - தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் நன்றி - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

ஆசிரியர்களுக்கு ஜீரோ கலந்தாய்வு இல்லை எனப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்த நிலையில் அதற்குத் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் நன்றி
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் நன்றி

By

Published : Oct 18, 2021, 10:02 AM IST

சென்னை:ஆசிரியர்களுக்கு ஜீரோ கலந்தாய்வு இல்லை என அன்பில் மகேஷ் அறிவித்தார். இதற்கு, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் மாநில தலைவர் தியாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு நடத்தப்பட்டதுபோல பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியர்களுக்கும் ஜீரோ கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது என்ற தகவல் கடந்த சில நாள்களாக காட்டுத்தீயாய் பரவி ஒட்டுமொத்த ஆசிரியர்களும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தனர்.

ஆசிரியர் இனத்தின் மீது அளவில்லாத அக்கறை கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் நிச்சயம் இந்த விஷயத்தில் தலையிட்டு ஆசிரியர்களின் மன உளைச்சலைப் போக்கிடுவார்கள் வேண்டும் என்ற நம்பிக்கையில் அனைத்து ஆசிரியர்களும், ஆசிரியர் சங்கங்களும் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

பள்ளிக் கல்வித் துறை அமைச்சருக்கு நன்றி

இந்நிலையில் அன்பில் மகேஷ், ஆசிரியர்களுக்கு கட்டாயம் ஜீரோ கலந்தாய்வு நடத்தப்படாது என்ற உறுதிமொழியை அளித்திருக்கின்றனர். இது ஆசிரியர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும் பாராட்டுதலையும் பெற்றிருக்கிறது. ஆசிரியர்கள் சார்பாகவும்; தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பாகவும் கோடானு கோடி நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் பணியிடத்தை ரத்துசெய்ததிலிருந்து கல்வித் துறையில் சீர்திருத்தங்கள் என்ற அடிப்படையில் பள்ளிக் கல்வித் துறை ஆணையர் எடுத்துவரும் நடவடிக்கைகளால் மிகுந்த மனச்சோர்வை அடைந்திருந்த ஆசிரியர்கள் மத்தியில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் இந்த அறிவிப்பு புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தன்னிச்சையான முடிவுகளைத் தவிர்க்க வேண்டும்

நிர்வாகப் பணியில் இருக்கக்கூடிய மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களை ஜீரோ கலந்தாய்வின் மூலம் நிரப்புவது ஏற்புடையதாக இருக்காது என்ற கருத்தை கல்வித் துறையில் உள்ள பெரும்பாலானவர்கள் வலியுறுத்திய நிலையில், அந்த கலந்தாய்வு நடத்தப்பட்டது. இதுபோன்ற புதிய முயற்சிகளை எடுக்கும்போது அலுவலர்கள் தன்னிச்சையாக தங்களது முடிவுகளை எடுத்துவிடாமல், ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளை குறைந்தபட்சம் அழைத்துப் பேசி முடிவுகளை எடுக்க வேண்டும்.

களத்தில் இருக்கக்கூடிய ஆசிரியர்கள், மாணவர்களின் மனநிலையை நன்கு உணர்ந்து அதற்கேற்ற வகையிலேயே அலுவலர்கள் முடிவினை மேற்கொள்ள வேண்டும். எனவே எந்த முடிவுகளை கல்வித் துறை அலுவலர்கள் எடுத்தாலும், இறுதியாக அந்த முடிவுகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தலையிட்டு ஆசிரியர்கள் மாணவர்கள் நலன் பாதிக்காத வகையில் முடிவுகளை எடுக்க வேண்டுகிறோம்.

நம்பிக்கையான அரசு

கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பெரும்பான்மையான ஆசிரியர்களை மாணவர்கள் பார்த்திருக்கவில்லை. கரோனா தொற்றினால் பள்ளிகள் திறக்கப்படாத சூழலில் ஏற்பட்டிருக்கிற இந்த அசாதாரண இடைவெளியைச் சரிசெய்வதற்கு ஆசிரியர்கள் மிகுந்த சிரமத்தைச் சந்திக்க வேண்டி இருக்கும். இந்தச் சூழ்நிலையில் அனுபவமிக்க ஆசிரியர்கள் அந்தப் பள்ளியில் ஏற்பட்டுள்ள இடைவெளியைச் சரிசெய்வதில் மிக முக்கியப் பங்காற்றுவர்.

மாணவர்களை உளவியல் ரீதியாகப் பாதித்து நாளடைவில் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்த காரணமாக இருக்கும். எனவே விரைவில் வெளிவரவுள்ள கலந்தாய்வு வழிகாட்டு நெறிமுறைகளில் கடந்த ஆண்டுகளில் வெளியிட்டது போன்ற வழிகாட்டு நெறிமுறைகளை இடம்பெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ஆசிரியர்கள் இந்த அரசு மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கின்றனர். அவருடைய நம்பிக்கை வீண் போகாத வகையில் கலந்தாய்வில் கடந்த காலங்களில் கடைப்பிடிக்கப்பட்ட நெறிமுறைகளையே இந்தாண்டும் கடைப்பிடிக்க வேண்டும். ஆசிரியர் இனத்தின் மீது மிகுந்த அக்கறைகொண்ட பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தலையிட்டு இதில் ஒரு நல்ல முடிவை அறிவிப்பார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:அரசு ஊழியர்களுக்கு செக் - ஊழல், போக்சோ வழக்கில் சிக்கினால் பிழைப்பூதியம் 'கட்'

ABOUT THE AUTHOR

...view details