சென்னை:முகப்பேர் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள சென்னை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வேதியியல் ஆசிரியராக பணியாற்றி வருபவர், ஸ்ரீதர். இவர் 12ஆம் வகுப்பு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகப் பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் சென்னை மாவட்ட குழந்தைகள் நலப்பாதுகாப்பு அலுவலர் கஸ்தூரியிடம் புகார் அளித்தனர்.
அதனடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கரோனா காலத்தில் ஆன்லைன் வகுப்பின்போது, பள்ளி மாணவியின் எண்களை ஆசிரியர் ஸ்ரீதர் பெற்று மாணவிகளுக்குத் தொடர்ந்து பாலியல் உணர்வைத் தூண்டும் வகையிலும், ஆபாசமாகப் பேசி வந்ததாகவும், மேலும் டியூஷன் எடுக்கும் இடத்திலும் ஸ்ரீதர் மாணவிகளிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் ஸ்ரீதர் பள்ளி மாணவிகளை வெளியில் அழைத்துச்சென்று பாலியல் தொந்தரவு கொடுத்ததும் விசாரணையில் அம்பலமானது. இவ்விவகாரம் தொடர்பாக பள்ளி மாணவிகளிடம் ஆசிரியர் ஸ்ரீதர் ஆபாசமாகப் பேசிய வாட்ஸ்அப் குறுஞ்செய்திகள் மற்றும் செல்போனில் பேசிய உரையாடல்கள் சமூக வலைதளங்களிலும் வைரலாகி சர்ச்சையானது.