எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) தலைமை அறிவியல் அறிஞர் சௌமியா சுவாமிநாதன் கூறும்போது, "நாட்டில் தற்போது ஊட்டச்சத்து குறைபாடும், உடல் பருமன் பிரச்னையும் ஒருசேர வந்துள்ளது.
பொதுவாக உயர் வருவாய் பிரிவில் உள்ள நாடுகளில் உடல் பருமன் பிரச்னை ஏற்படும். குறைந்த வருவாய் ஈட்டும் நாடுகளில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும் என்றும் நினைக்கிறோம்.
ஆனால், அண்மைக்காலமாக குறைந்த அளவு வருவாய் ஈட்டும் மத்திய தர நாடுகளிலும் உலகெங்கிலும் இவை இரண்டும் ஒரே நேரத்தில் ஏற்படுகின்றன. இதனை சரிசெய்ய தேவையான நடவடிக்கை நாம் எடுக்க வேண்டும்.
உலகில் 230 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு உடல் பருமன் பிரச்னை உள்ளது. இந்நேரத்தில், 15 கோடி குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் உள்ளனர்.
ஊட்டச்சத்து பிரச்னை குறைந்துவரும் வேளையில், உடல் பருமன் தொடர்ந்து உயர்ந்துவருகிறது. இது நீண்டகால பாதிப்பை ஏற்படுத்தும், வருங்காலத் தலைமுறையினர் மீது தாக்கத்தை ஏற்படுத்தும்.
பதப்படுத்தப்பட்ட உணவுகள், ஆரோக்கியமான உணவுகளைவிட குறைந்த விலையில் கிடைப்பதால், ஏழை மக்களும் இதனை வாங்கிப் பயன்படுத்துகின்றனர்.