தனியார் நிதி நிறுவனங்கள் வாகனங்களைப் பறிமுதல்செய்வதை நிறுத்த வேண்டும், டிசம்பர் மாதம் வரை கடன்களைத் திரும்ப செலுத்த மத்திய அரசு அவகாசம் வழங்க வேண்டும், வட்டி செலுத்தாத காலத்திற்கு கூடுதல் வட்டி வசூலிக்கக்கூடாது, வாகன வரியை ரத்துசெய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வாடகை வாகன உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பேசிய அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் ஜூட் மேத்யூ, ”மக்கள் குறைந்த அளவிலேயே பயணம்செய்வதால் வாகன ஓட்டிகள் வருவாய் இன்றி தவித்துவருகின்றனர். பெரும்பாலானோர் கடன் பெற்றுதான் வாகனங்களை ஓட்டிவருகின்றனர். இதனால் டிசம்பர் வரை கடனைத் திரும்ப செலுத்துவதையும், கூட்டு வட்டி வசூல்செய்வதையும் நிறுத்திவைக்க வேண்டும்.
மார்ச் மாதம் முதல் போக்குவரத்து முடக்கப்பட்ட நிலையில், பல தனியார் நிதி நிறுவனங்கள் சட்டத்திற்குப் புறம்பாக வாகனங்களைப் பறிமுதல் செய்துவருகின்றனர். இது குறித்து முதலமைச்சர், போக்குவரத்துத் துறை அமைச்சர், மத்திய நிதியமைச்சர் உள்ளிட்டோரிடம் 13 முறை கோரிக்கை மனு அளித்துள்ளோம். ஆனால், முதலமைச்சர், அமைச்சர் எங்களை நேரில் சந்திக்க மறுத்துவிட்டனர்.