நேற்று (மார்ச் 9) சென்னையில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன், "இந்த 15 ஆண்டுகளில் தனியாரிடம் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதால் ஏற்படும் இழப்புதொகை மட்டும் ஒரு லட்சம் கோடி ரூபாய். இதில் ஏற்கனவே 54,000 கோடி ரூபாயை இழந்து விட்டோம். மேலும் இந்த ஒப்பந்தங்களை உடனடியாக ரத்து செய்யாவிட்டால் மேலும் 46,000 கோடி ரூபாயை இழக்க நேரிடும். இந்த ஊழல் முறைகேட்டிற்கு பொறுப்பான துறை அமைச்சர்கள் தங்கமணி மற்றும் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் உள்பட பொது ஊழியர்கள் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரி அறப்போர் இயக்கம் இன்று (அதாவது மார்ச் 9) லஞ்ச ஒழிப்பு துறையிடம் புகார் கொடுத்துள்ளது", எனத் தெரிவித்தார்.
"மின்சாரம் கடந்த ஐந்து ஆண்டுகளாக சந்தையில் ஒரு யூனிட்டுக்கு 2.50 ரூபாய் முதல் 3.50 ரூபாய் வரையில் எளிதாக கிடைக்கிறது. ஆனால் நம் தமிழ்நாடு அரசு சட்ட விரோத ஒப்பந்தங்கள் மூலம் தனியார் நிறுவனங்களிடமிருந்து ஒரு யூனிட் 4.90 ரூபாய் முதல் ஆறு ரூபாய் வரையில் கொள்முதல் செய்து வருகிறது.
இந்த நீண்ட காலம் ஒப்பந்தம் மூலம் 15 ஆண்டுகளுக்கு தினமும் 5.79 கோடி யூனிட்டுகள் வாங்கப்படுகிறது, இது தான் இந்த ஊழலின் மிக முக்கிய சாராம்சம்" என புகார் தெரிவித்தார்.
"மிக முக்கியமாக இந்திய அரசின் தலைமை கணக்கு தணிக்கையாளர் 2013 முதல் 2018 வரை இந்த ஒப்பந்தம் மற்றும் வேறு சில ஒப்பந்தங்கள் மூலம் தனியாரிடம் இருந்து கொள்முதல் செய்ததில் ஏற்பட்ட இழப்பு, கிட்டத்தட்ட 30,072 கோடி ரூபாய் எனத் தெரிவித்துள்ளார்" என்று கூறிய அவர், "இந்தத் தணிக்கை அறிக்கை தமிழ்நாடு அரசால் இன்று வரை சட்டசபையில் தாக்கல் செய்யப்படவில்லை. அறப்போர் இயக்கம் இன்று (மார்ச் 9) இந்தத் தணிக்கை அறிக்கையின் நகலை மக்கள் நலன் கருதியும் இந்த துறையின் நலன் கருதியும் வெளியிட்டுள்ளது" எனக் கூறினார்.