இது தொடர்பாக அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், "மக்களுக்காகத்தான் அரசும் சட்டமும். ஆனால் மக்கள் விருப்பத்துக்கு மாறாக,சட்டத்துக்கு புறம்பாக அமைக்கப்பட்டன கூடங்குளம் அணுவுலைகள்.
மின் உற்பத்திக்கென சொல்லப்பட்ட அந்த அணுவுலைகள், அடிக்கடி நின்றுபோவது ஏன்? பழுதாவது ஏன்? அவற்றின் தரம் பற்றிய நற்சான்றிதழ் எங்கே? எந்தக் கேள்விக்கும் இதுவரை பதிலில்லை.
கூடங்குளம் அணுவுலைகளில் உற்பத்தியாகும் அணுக்கழிவுகளை அங்குள்ள வளாகத்தினுள்ளேயே வைக்க முடிவு செய்துள்ளனர். அதற்காக, ‘பொதுமக்களின் கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்தவுள்ளார்கள். இந்தக் கருத்துக் கேட்புக் கூட்டம் வரும் ஜூலை 10ஆம் தேதியன்று நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் நடைபெறும் என அறிவித்துள்ளது மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்.
இந்த அறிவிப்பானது,ஏற்கனவே அணு ஆபத்து அச்சத்தில் இருக்கும் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. காரணம், அணுவும் சரி,அணுக்கழிவும் சரி, நிரந்தர அழிவு சக்தியே என்பது தெரியவந்துள்ளதால்.
தமிழ்நாடு அரசு கூடங்குளம் அணுவுலை வளாகத்துக்குள் அணுக்கழிவு மையம் அமைக்க அனுமதி அளிக்கக் கூடாது. நிரந்தர அணுக்கழிவு மையத்திற்கான தெளிவான திட்டத்தை உருவாக்கும் வரையில் கூடங்குளம் அணுவுலைகள் இரண்டையும் நிறுத்த வேண்டும். மேற்கொண்டு அங்கு அணுவுலைகள் அமைப்பதையும் கைவிட வேண்டும். இதனை தமிழ்நாட்டிலுள்ள அரசியல் கட்சிகள், அமைப்புகள், மக்களவை உறுப்பினர்கள் அனைவரும் வலியுறுத்த வேண்டும்.
ஏற்கனவே தமிழ்நாட்டு மக்கள் கூடங்குளம் அணுவுலையால் அழிவின் பிடியில் இருக்கின்றனர். கூடுதலாக, அணுக்கழிவையும் அங்கேயே வைப்பதென்றால், தமிழ்நாடு அழிவின் விளிம்புக்கே தள்ளப்படும். எனவே அணுக்கழிவை அங்கே வைக்கும் முடிவுக்குக் கண்டனம் தெரிவிப்பதோடு, அம்முடிவை உடனடியாகக் கைவிடுமாறு தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.