தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

நாகூர் கந்தூரி விழா: சுற்றுலாவிற்கு ஏற்பாடு

சென்னை: புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்கா கந்தூரி விழாவிற்கு செல்வதற்கு வசதியாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் இரண்டு நாள் சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

kanthuri
kanthuri

By

Published : Jan 30, 2020, 1:04 PM IST

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்கா உள்ளது. சிறந்த மதநல்லிணக்க வழிபாட்டுத் தலமாக விளங்கும் இந்த தர்காவில், நாகூர் ஆண்டவரின் மறைந்த நாள் ஆண்டுதோறும் கந்தூரி விழாவாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. அதன்படி, இந்தக் கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.

விழாவின் முக்கிய நிகழ்வாகச் சந்தனக்கூடு ஊர்வலம் நடக்கவிருக்கிறது. நாகையிலிருந்து புறப்படும் சந்தனக்கூடு பிப்ரவரி 5ஆம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு, நாகூர் தர்காவை வந்தடையும். பின்னர் நாகூர் தர்காவில் பாத்தியா ஓதி, நாகூர் ஆண்டவருக்கு சந்தனம் பூசப்படும் இந்நிகழ்வில் திரளான மக்கள் கலந்துகொள்வார்கள்.

அனைத்து மதத்தினரும் வழிபடும் நாகூர் தர்கா கந்தூரி விழாவிற்கு மக்கள் செல்வதற்கு வசதியாக, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சுற்றுலா ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி, சுற்றுலா பிப்ரவரி 4 ஆம் தேதி காலை 7 மணி அளவில் நாகூருக்கு புறப்பட்டு, பின்னர் 6 ஆம் தேதி காலை சென்னை வந்தடையும். இரண்டு நாள்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தச் சுற்றுலாவிற்காக, சென்னையிலுள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக தலைமை அலுவலகத்திலிருந்து, குளிர்சாதன சொகுசுப் பேருந்து இயக்கப்படுகிறது.

செல்லும் வழியில் பிச்சாவரம் சுற்றுலாத் தலத்தை காண்பதற்கும், திருக்கடையூர் ஓட்டல் தமிழ்நாடு விடுதியில் தங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலதிக தகவல்களுக்கு, ’தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், சுற்றுலா வளாகம், வாலாஜா சாலை, சென்னை-2’ என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பர்மாவில் 4ஆவது உலகத்தொழில் மாநாடு - எழுமின் அமைப்பு

ABOUT THE AUTHOR

...view details