நாடு முழுவதும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், அத்தியாவசியப் பொருட்களை சாலை மார்க்கமாகக் கொண்டு செல்வதில் பல்வேறு பிரச்னைகள் உள்ளன. இதனால், தானியங்கள் மற்றும் எளிதில் கெட்டுப் போகும் தன்மை கொண்ட உணவுப் பொருட்களை தேவையான இடங்களுக்குக் கொண்டு செல்வதில் ரயில்வே நிர்வாகம் தீவிரம் காட்டியது.
சரக்குப் போக்குவரத்துத் தடையின்றி நடைபெறவும், மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கும் வகையிலும் இந்திய ரயில்வே நிர்வாகம் முக்கிய வழித்தடங்களில் சிறப்பு பார்சல் ரயில்களை இயக்கி வருகிறது.
இதனால், சரக்கு ரயில் மூலம் தனியார் உணவு தானியங்களைக் கொண்டு செல்வது கடந்த ஆண்டை விட இந்தாண்டு அதிகரித்து இருப்பதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. கடந்தாண்டு மார்ச் 25 முதல் ஏப்ரல் 28ஆம் தேதி வரையான காலகட்டத்தில் இந்திய ரயில்வே 6.62 டன் உணவு தானியங்களை கொண்டு சென்றது. தற்போது இதே காலகட்டத்தில், 303 ரேக்குகள் மூலம் 7.72 டன் உணவு தானியங்கள் பல்வேறு பகுதிகளுக்குக் கொண்டு செல்லப்பட்டு, மக்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன.