சென்னை: தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் வரும் பக்தர்களுக்கு இலவசமாகப் பிரசாதம் வழங்கும் திட்டத்தை இன்று (ஏப்.23) இந்து அறநிலைத் துறை அமைச்சர் சேகர்பாபு காணொலி மூலம் தொடங்கிவைத்தார்.
இந்தத் திட்டத்தில் முதற்கட்டமாகச் சென்னை வடபழனி ஆண்டவர் திருக்கோயிலில் பழநி தண்டாயுதபாணிசுவாமி திருக்கோயில், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் உள்பட 10 திருக்கோயில்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்த நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தபின் பேசிய அமைச்சர், ’சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, லட்டு, வெண்பொங்கல், லெமன் சாதம், தேங்காய் சாதம், தயிர் சாதம், சுண்டல் போன்ற பிரசாதங்கள் திருக்கோயில்களுக்கு வருகின்ற பக்தர்களுக்கு நாள் தோறும் வழங்கப்படும்.
இதனால் 10,000 முதல் திருவிழா காலங்களில் 25,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பிரசாதங்களைப் பெற்றுப் பயனடைவார்கள். அதற்குத் தகுந்தார் போல் அந்தந்த திருக்கோயில்களில் தகுதியான பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
உணவுப் பொருள்கள் தரமாகத் தயார் செய்ய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 341 திருக்கோயில்களின் பிரசாதம், நைவேத்யம், உணவு தொடர்பாக ஒன்றிய அரசிடம் தரச்சான்றிதழ் பெறப்பட்டுள்ளது.
இதன்படி இந்தியாவில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது. கரோனா தொற்று காரணமாகத் திருக்கோயில்களுக்கு வருகின்ற பக்தர்கள் 'வருமுன் காப்போம்' என்பதே தாரக மந்திரத்திற்கு கேற்ப அனைவரும் முகக்கவசம் அணிந்து வர அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. 5 ஆண்டுக்கு மேல் பணிபுரிந்தோருக்குப் பணி நியமன ஆணைகள் முதலமைச்சர் மூலம் வழங்கப்பட உள்ளன’ எனத் தெரிவித்தார்.
சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் பிரச்சினை:மேலும் சிதம்பரம் கோயிலில் தீட்சிதர்கள், பக்தர்கள் இடையே முரண்பாடு ஏற்படாமல் தீர்வு காணப்படும். முறைகேடுகளைக் களைய இந்து அறநிலையத்துறை சட்டங்கள் வலிமையாக இருப்பதால் சிதம்பரம் கோயில் தொடர்பாக புதிய சட்டம் தேவையில்லை.
சிதம்பரம் கோயில் தொடர்பான நீதிபதி உத்தரவு நகல் நேற்று பெறப்பட்டது. நீதிமன்ற உத்தரவின்படி புதிய குழு அமைத்துத் தீர்வு காண உள்ளோம். தீட்சிதர்கள் அனைவரும் பாராட்டும் வகையில் இந்து அறநிலையத்துறை செயல்படும். ஆயிரம் ஆண்டு பழைமையான திருக்கோயில்கள் சீரமைக்க இந்த ஆண்டில் 100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” எனக் கூறினார்.
இதையும் படிங்க:சமயபுரம் மாரியம்மன் சித்திரை தெப்பத்திருவிழா!