சென்னை:இது குறித்து அவர் தமிழ்நாடு முதலமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில், "கடந்த மார்ச் 2020 முதல் கரோனா பெருந்தொற்றிலிருந்து மாணவர்களை பாதுகாக்கும் பொருட்டு 2021 சில நாட்கள் 10, 12ஆம் வகுப்பு மாணவர்கள் தவிர, பிற வகுப்பு மாணவர்களை பள்ளிகளுக்கு வரச்சொல்லவில்லை.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கற்றல்-கற்பித்தல் பணி முடக்கத்தில் உள்ளது. கல்வித் தொலைகாட்சி - இணையவழி கல்வியென்பது ஒருவழிப்பயிற்சியாகும்; அது முழுமையாக பயன்தராது.
எழுத்துகளே மறந்து போகும் நிலை
முதலமைச்சரின் சீரிய நடவடிக்கைகளால் மாணவர்களின் நலன்கருதி முடங்கிப்போயிருக்கும் கற்றல் பணியினை தொடங்க பள்ளிகளை திறக்க தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகிறது. குறிப்பாக தொடக்கக்கல்வி மாணவர்கள் எழுத்துகளே மறந்துபோகும் நிலை உருவாகியுள்ளது.
உயர், மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு படிப்பில் நாட்டம் குறைந்துள்ளது. எனவே, முற்றிலுமாக கரோனா தொற்று குறையாத காரணத்தினால் 9 முதல் 12ஆம் வகுப்புகள் வரை தினந்தோறும் 5 பாடவேளைகளுடனும், 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை சுழற்சி முறையிலும் பள்ளிகள் இயங்குவதற்கு ஆவன செய்ய வேண்டும்.
மாணவர்கள் நலன்
மேலும், பள்ளிகள் திறந்தவுடன் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஆலோசனைகளை பெற்றோர்களுக்கு வழங்கிடவேண்டும். மாணவர்கள் நெடுங்காலம் கற்றல் தொடர்பில்லாமல் இருந்து வருவதால் முதல் ஒரு வாரம் மாணவர்களுடன் ஆசிரியர்கள் கலந்துரையாடி மனரீதியாக கற்றல் சூழலுக்கு கொண்டுவந்தபிறகு பாடங்களை நடத்த அறிவுறுத்தவேண்டும்.
தேவையான அரசு வழிகாட்டு நெறிமுறைகளுடன் பாதுகாப்பு உபகரணங்கள் கிருமி நாசினி, சோப்பு உள்ளிட்டவைகளுடன் மாணவர்களுக்கு நோய் எதிர்ப்பு சத்து மாத்திரைகள் வழங்கிடவேண்டும்.
தற்போதையச் சூழலில் கல்வியின் தேவையறிந்து மாணவர்களின் நலன்கருதி பள்ளிகளை ஜூலை மூன்றாவது வாரத்தில் தொடங்கிட முதலமைச்சர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும என கேட்டுக் கொள்கிறேன்" என்று கோரிக்கை வைத்துள்ளார்.