சென்னை:ஊக்க ஊதிய உயர்வு நிறுத்தத்தை திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
இது குறித்து அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் அ.சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதலில் ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு செய்வதை நிதி பற்றாக்குறையால் நிறுத்தியுள்ளதாக ஒரு அரசாணை பிறப்பித்தார்கள். இரண்டாவது அகவிலைப்படியை நிறுத்தினார்கள். அடுத்தக்கட்டமாக எந்த உரிமையை பறிக்க அரசு ஆணை வெளியிடப் போகிறார்கள் என்ற அச்சத்தில் ஆசிரியர்கள் உள்ளனர்.
தமிழ்நாடு அரசு, ஆசிரியர்களை பழிவாங்கும் நோக்கில் இருப்பது மிகவும் வருந்தக்கூடிய செயலாக உள்ளது என தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் கருதுகிறது. போராடிப் பெற்ற உரிமைகளையும், பாதுகாக்க கூடிய அரசாணையையும் வெளியிட வேண்டும், ஆசிரிய அரசு ஊழியர்களுக்கு பாதகமான அரசாணையை வெளியிடுவதை பரிசீலனை செய்யவேண்டும்.
2004 முதல் அரசு உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில், இடைநிலை ஆசிரியர் பணி நியமனம் கிடையாது என்பது அரசின் கொள்கை முடிவு என்று உரைக்கும் அரசு, அங்கு பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கி இருக்க வேண்டும் அல்லது பட்டதாரியாகவாவது உட்படுத்தி இருக்க வேண்டும். ஏனென்றால், அனைத்து ஆசிரியர்களும் பட்டதாரிகளுக்கான முழு கல்வித் தகுதியுடன் உள்ளார்கள்.
எனவே அரசு இதனை கருத்தில்கொண்டு, அரசு உதவிப்பெறும் உயர் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் அனைத்து இடைநிலை ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்பட 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சார்பாக நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள 17-பி குறிப்பாணை குற்றவியல் நடவடிக்கை போன்றவற்றை ரத்து செய்ய வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.