கரோனா பரவலை அடுத்து மார்ச் மாதம் 24ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சிறு, குறுந்தொழில்கள், தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, தையல் தொழில் போன்ற சுய தொழிலில் ஈடுபட்டுள்ளோர் பெரியளவில் பாதிப்பைச் சந்தித்து வருகின்றனர்.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தீபாவளி, பொங்கல் போன்ற விழா நாட்கள் வந்தாலே, துணி எடுத்து தைப்பதுதான் வழக்கமாக இருந்தது. இதனால் தையல் தொழிலில் ஈடிபட்டு வந்தோரும் பயனடைந்து வந்தனர். ஆனால், தற்போது ஆயத்த ஆடைகளின் பக்கம் மக்கள் சென்றதால், சரியான வருமானம் ஈட்ட முடியாமல் நலிந்த நிலையில் தையல் கலைஞர்களின் வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது.
இடிமேல் இடியாக கிடைத்து வந்த சொற்ப வருமானமும், தற்போது கரோனா தொற்றால் நின்றுபோய் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர் தையற்கலைஞர்கள். இப்பேரிடர் நேரத்தில், தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினராக இருந்தும் அரசு எந்தவித நலத்திட்டங்களையும் தங்களுக்கு அளிக்கவில்லை என அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினராக இருந்தும் அரசு உதவவில்லை கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் யாரும் அதிக நேரம் கடையில் இருப்பதில்லை என்பதால், அரசு கூறும் வழி முறைகளின் அடிப்படையில் இடைவெளியை கடைப்பிடித்து தாங்கள் தொடர்ந்து துணிகளைத் தைக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர். மேலும், மாணவர்களுக்கான பள்ளிச் சீருடை தைப்பதால் வரும் வருமானத்தைக் கொண்டே, தங்கள் குழந்தைகளின் கல்விக் கட்டணத்தை செலுத்தி வருவதாகவும் கூறுகின்றனர்.
பள்ளிச்சீருடை வருமானத்தைக் கொண்டே, குழந்தைகளின் கல்விக் கட்டணம் செலுத்துகிறோம் ஒரு காலத்தில் அனைவரின் உடைத் தேவைகளையும் நிறைவு செய்து வந்த தையற்கலைஞர்கள், இப்போது, மாணவர்களின் பள்ளிச் சீருடை தைப்பதை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர். இம்மாதிரியான நேரத்தில் அதுவும் கேள்விக்குறியாவதால் செய்வதறியாது விழிபிதுங்கி நிற்கின்றனர், துணியுடன் சேர்த்து வாழ்க்கையையும் தைக்கும் இக்கலைஞர்கள்.
இதையும் படிங்க:கடைகளை திறக்க அனுமதிவேண்டும் - வாகனப் பழுது நீக்குவோர் கோரிக்கை