மேகாலயா மாநிலத்தில் 83ஆவது தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் இன்று (ஏப்ரல்.18) தொடங்கின. இதில் கலந்து கொள்ள தமிழ்நாடு சார்பில் இளம் வீரரான விஷ்வா தீனதயாளன் உள்பட 4 வீரர்கள் கார் மூலம் அஸ்ஸாமிலிருந்து மேகாலயாவுக்கு நேற்று (ஏப்ரல்.17) புறப்பட்டுச் சென்றனர்.
அஸ்ஸாமின் கவுகாத்தில் இருந்து மேகாலயாவின் ஷிலாங்க் நோக்கி கார் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானது. இதில் சிக்கி தமிழ்நாட்டைச் சேர்ந்த இளம் டேபிள் டென்னிஸ் வீரர் விஷ்வா தீனதயாளன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் படித்தவர், விஷ்வா தீனதயாளன். சிறு வயது முதலே டேபிள் டென்னிஸில் ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார். சென்னையின் அண்ணா நகரிலுள்ள கிருஷ்ணசாமி டேபிள் டென்னிஸ் கிளப்பில் பயிற்சி பெற்றவர். பல தேசிய தரவரிசை பட்டங்கள் மற்றும் சர்வதேச பதக்கங்களைப் பெற்றவர்.
2019ஆம் ஆண்டு நடைபெற்ற சப்ஜீனியர் ஆண்கள் பிரிவில் உலக தரவரிசையில் 49ஆவது இடத்தையும், 2019-2020ஆம் ஆண்டு நடைபெற்ற ஜூனியர் ஆண்கள் பிரிவில் இந்தியாவில் நம்பர் 1 இடத்தையும் பிடித்து சாதனைப் படைத்தவர். ஜெய்கோபால் கரோடியா விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் மேல்நிலைப் படிப்பை முடித்தார்.
இந்தியாவைப் பெருமைப்படுத்திய வீரர்
2015ஆம் ஆண்டில் ஆண்கள் பிரிவில் தேசிய சாம்பியனான தமிழ்நாட்டிலிருந்து முதல் வீரராகவும், 2018ஆம் ஆண்டில் சப் ஜூனியர் பிரிவில் இந்தியாவின் முதல் வீரராகவும் விஷ்வா வலம் வந்தார். அவர் கெலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டியில் இரட்டையர் மற்றும் வெண்கலப் பதக்கம் வென்றார். ஆசிய சாம்பியன்ஷிப், சீனா ஓபன் போன்றவற்றில் இந்தியாவைப் பெருமைப்படுத்தினார்.
சாதிக்கவேண்டிய விஷ்வா தீனதயாளன் மறைவு 2019ஆம் ஆண்டு ஹாங்காங் ஓபனில் வெண்கலப் பதக்கம் வென்றார். 2018ஆம் ஆண்டு செர்பியா ஓபனில் தங்கப் பதக்கமும், குரேஷியாவில் வெண்கலப் பதக்கமும் வென்றார். விஷ்வாவிற்கு சாம்பியன் மேம்பாட்டுத்திட்டத்தின்கீழ் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் உதவி செய்திருக்கிறது.
மேலும், வரும் 27ஆம் தேதி ஆஸ்திரியாவின் லின்ஸில் நடைபெறும் இளைஞர் போட்டியில் இந்தியா சார்பாக கலந்துகொள்ள தேர்வு செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. விஷ்வா தீனதயாளன் உயிரிழப்பு பல்வேறு தரப்பினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் மறைவிற்குப் பிரதமர், முதலமைச்சர், அமைச்சர்கள் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க:சாலை விபத்தில் உயிரிழந்த டேபிள் டென்னிஸ் வீரர் விஷ்வா உடல் சென்னை கொண்டு வரப்பட்டது