ஊரடங்கு காரணமாக போக்குவரத்து வசதி இல்லாத நிலையில், அத்தியாவசியப் பணியாளர்கள், 50 விழுக்காடு அரசு ஊழியர்கள், தலைமைச் செயலக ஊழியர்கள் பணிக்கு வருவதற்காக சென்னையில் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
ஏற்கனவே, தலைமைச் செயலக ஊழியர்களுக்காக 25 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை முதல் கூடுதலாக 25 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் கூடுவாஞ்சேரி, வண்டலூர், ஊரப்பாக்கம், பெருங்களத்தூர் ஆகிய புறநகர் பகுதிகள், செங்கல்பட்டு, தாம்பரம் மார்க்கத்தின் கடைசி எல்லையில் உள்ளதால், அவ்வழியாக இயக்கப்படும் பேருந்துகள் மறைமலைநகர், கூடுவாஞ்சேரி, வண்டலூர், ஊரப்பாக்கம், பெருங்களத்தூர் பகுதிகளில் நிறுத்தப்படுவதில்லை என தலைமைச் செயலக ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதனால் அப்பகுதிகளில் இருந்து தலைமைச் செயலகம் வரும் பணியாளர்கள் பேருந்து வசதியின்றி மிகுந்த சிரமப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.