தொடக்கக் கல்வித்துறையில் உள்ள ஆரம்பப் பள்ளிகளில் 60 மாணவர்கள் வரை 2 ஆசிரியர்களும், அதற்கு மேல் 30 மாணவர்களுக்கு தலா 1 ஆசிரியர் வீதம் கூடுதலாக நியமிக்கப்படுகின்றனர். நடுநிலைப் பள்ளிகளில் 105 மாணவர்களுக்கு 3 பட்டதாரி ஆசிரியர்களும், அதற்கு மேல் 35 மாணவர்களுக்கு கூடுதலாக 1 ஆசிரியர் வீதம் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
அதேபோல் பள்ளிக்கல்வித்துறையில் 6,7,8 ஆம் வகுப்புகளில் 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதம் பணி நியமனம் செய்ய வேண்டும். 9 மற்றும் 10 ஆம் வகுப்பில் படிக்கும் 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதம் நியமனம் செய்ய வேண்டும். 11,12 ஆம் வகுப்பில் 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் நியமனம் செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது. அதனடிப்படையிலேயே கடந்த 3 ஆண்டுகளாக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியர்கள், மாணவர்கள் எண்ணிக்கை அடிப்படையில் சுமார் 17 ஆயிரம் ஆசிரியர்கள் உபரியாக உள்ளதாக கூறப்பட்டு வருகிறது. ஆனால், மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறைக்கு தமிழ்நாடு அரசு அளித்துள்ளத் தகவலில் தமிழகத்தில் பின்பற்றப்படும் ஆசிரியர், மாணவர் விகிதாச்சாரம் முற்றிலும் மாறுபட்டுள்ளது.
2017-18 ஆம் கல்வியாண்டு - ஆசிரியர், மாணவர் விகிதாச்சாரம் :
- தொடக்கப்பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை, 18 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர்
- நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை, 18 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர்
- உயர்நிலைப் பள்ளிகளில் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை, 24 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர்
- மேல்நிலைப் பள்ளிகளில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை, 20 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் பாடம் நடத்துகின்றனர்.
2017-18 ஆம் கல்வியாண்டு - ஆசிரியர், மாணவர் விகிதாச்சாரம்
- அதேபோல், தொடக்கப்பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை, 11 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர்
- நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை, 19 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர்
- மேல்நிலைப்பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை, 26 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர்
- மேல்நிலைப் பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை, 23 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியரும் பாடம் நடத்துகின்றனர்.
தமிழகத்தில் 2018-19 ஆம் கல்வியாண்டில் ஆசிரியர், மாணவர் விகிதாச்சாரம்:
- தொடக்கப்பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை, 20 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர்
- நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை, 18 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர்
- உயர்நிலைப் பள்ளிகளில் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை, 15 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர்
- மேல்நிலைப் பள்ளிகளில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை, 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியரும் பாடம் நடத்துகின்றனர்.
தமிழகத்தில் 2018-19 ஆம் கல்வியாண்டில் ஆசிரியர், மாணவர் விகிதாச்சாரம்
- அதேபோல், தொடக்கப்பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை, 10 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர்
- நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை, 17 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர்
- மேல்நிலைப்பள்ளிகளில் 6 முதல் 12 ம் வகுப்பு வரை, 23 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர்
- மேல்நிலைப் பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை, 27 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியரும் பாடம் நடத்துகின்றனர்.
தேசிய அளவில் 2018-19 ஆம் கல்வியாண்டில் ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரம்:
- தொடக்கப்பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை, ஒரு ஆசிரியர் 23 மாணவர்களுக்கும்
- நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை, ஒரு ஆசிரியர் 24 மாணவர்களுக்கும்
- உயர்நிலைப் பள்ளிகளில் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை, ஒரு ஆசிரியர் 29 மாணவர்களுக்கும்
- மேல்நிலைப் பள்ளிகளில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை, ஒரு ஆசிரியர் 27 மாணவர்களுக்கும் பயிற்றுவிக்கின்றனர்.
தேசிய அளவில் 2018-19 ஆம் கல்வியாண்டில் ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரம்
- அதேபோல், 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையில் உள்ள தொடக்கப்பள்ளிகளில் ஒரு ஆசிரியர் 24 மாணவர்களுக்கும்
- 6 முதல் 10 ஆம் வகுப்பு வரையில் உள்ள நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளில் ஒரு ஆசிரியர் 24 மாணவர்களுக்கும்
- 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையில் உள்ள மேல்நிலைப்பள்ளிகளில் 36 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியரும்
- 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில் 42 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியரும் பாடம் நடத்துகின்றனர்.
மத்திய அரசின் புள்ளிவிவரத் தகவலின் அடிப்படையில் தமிழ்நாட்டில் ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரத்தில் வேறுபாடு உள்ளது. மத்திய அரசிடம் அளித்துள்ள புள்ளி விவரத்தின் அடிப்படையில் மாணவர் ஆசிரியர் விகிதத்தை பள்ளிக்கல்வித்துறை சரியாக கடைப்பிடிக்குமானால் உபரி ஆசிரியர்கள் பணியிடம் என்பதே இருக்காது. ஆனால், மத்திய அரசிற்கு ஒரு புள்ளி விவரத்தை அளித்துவிட்டு, ஆசிரியர் பணி நியமனத்தில் அரசு வேறுமுறையை கடைபிடித்து வருவது ஆசிரியர்களிடையே மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசிற்கு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை தொடர்ந்து தவறானத் தகவல்களை அளித்து வந்தாலும், தகவல் தொழில் நுட்பத்தின் வளர்ச்சியால் அவ்வாறான செயல்களும் தொடர்ந்து வெளிச்சத்திற்கு வந்து கொண்டேயிருக்கிறது. ஆசிரியர் நியமனத்தில் இனிமேலாவது பள்ளிக்கல்வித்துறை வெளிப்படைத்தன்மையுடன் நடந்துகொள்ளுமா என்பதே கேள்வியாக இருக்கிறது.
இதையும் படிங்க: முதலமைச்சரின் அறிவிப்பு ஒரு பொய் வாக்குறுதி - டெல்டா எம்பிக்கள்