கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட குரூப்-4 தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சிபிசிஐடி காவல் துறையினர் நடத்திய விசாரணையில், 99 தேர்வர்கள் குரூப்-4 தேர்வில் இடைத்தரகர்கள், தேர்வுப் பணியில் ஈடுபட்டிருந்த நபர்கள் ஆகியோரின் உதவியுடன், அழியும் மையால் தேர்வெழுதி முறைகேட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் அனைவருக்கும் வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இந்த முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி, இடைத்தரகர்களையும், முறைகேட்டில் ஈடுபட்டவர்களையும் கைதுசெய்து வருகின்றனர். இந்நிலையில், இது தொடர்பாக தமிழ்நாடு பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் நிர்வாக சீர்திருத்தத் துறைச் செயலர் ஸ்வர்ணா, அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆலோசனைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "குரூப் 4 தேர்வு முறைகேட்டை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இனி எதிர்வரும் காலங்களில் இதுபோன்ற முறைகேடுகள் நடைபெறாமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. குரூப் 4 தேர்வில் செய்யப்பட்ட முறைகேடுகளில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களைக் கைதுசெய்து உரிய நடவடிக்கையை அரசு எடுக்கும்.