தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக மகளிர் காங்கிரஸ் சார்பில் இன்று கோலம்போடும் போராட்டம் நடைபெற்றது. இதில் 30-க்கும் அதிகமான மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்றனர். அப்போது, திடீரென அவர்கள் சாலைமறியலில் ஈடுபட முயன்றதால் காவல் துறையினருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவர் ஜான்சி ராணி, “நாம் கடினமாகப் போராடி பெற்ற சுதந்திரத்தை இந்த மோடி அரசிடம் கொடுத்து வீணடித்துவிட்டோம். குடியுரிமை திருத்தச் சட்டத்தின் வாயிலாக நாட்டை மதரீதியாகப் பிளக்கும் மோடி அரசை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதை மோடியும் அமித்ஷாவும் உணர வேண்டும்“ எனக் கூறினார்.