தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று உள்ளாட்சி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறைக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பல்வேறு புதிய திட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்.
1. திருச்சி மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்டப் பகுதி மற்றும் அபிவிருத்தி சார்ந்த பகுதிகளுக்கு புதிய பாதாள சாக்கடைத் திட்டம் 238 கோடி ரூபாயில் மேற்கொள்ளப்படும்.
2. மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் உள்ள 40 குளங்கள் 20 கோடி ரூபாயில் சீரமைக்கப்படும்.
3. 34 நகரங்களுக்கு கழிவு நீர் குழாய்கள் மற்றும் ஆள் இறங்கு குழிகளில் ஏற்படும் அடைப்புகளை நீக்கி சுத்தம் செய்ய 34 ரோபோ இயந்திரம் 35 கோடி ரூபாய் செலவில் வாங்கப்படும்.
4. மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி துப்புரவுப் பணியாளர் வாரிசுகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும்.
5. ஒவ்வொரு மாநகராட்சிக்கும் தலா ஒரு கழிவறை வீதம், அனைத்து மாநகராட்சிகளிலும் குளிரூட்டப்பட்ட கழிவறைகள் சோதனை முறையில் பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் அமைக்கப்படும்.
6. சென்னை மாநகராட்சியில் பாதசாரிகளுக்கு வசதியாக 7 இடங்களில் நகரும் படிக்கட்டுகளுடன் கூடிய நடை மேம்பாலம் 45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.