சென்னை: தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மே மாதம் 3ஆம் தேதி தொடங்கி மே 21ஆம் தேதி வரை நடைபெறும் என அரசு அறிவித்திருந்தது. இவர்களுக்கான செய்முறைத் தேர்வு இந்த மாதம் 16ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதி நடைபெறுகிறது. அதனை கருத்தில் கொண்டு பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மே 3ஆம் தேதி தொடங்குவதாக இருந்த மொழிப்பாடத் தேர்வு தள்ளிவைக்கப்பட்டு, மாறாக மே 31ஆம் தேதி நடைபெறும் என அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
மற்ற தேர்வுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த தேதியிலேயே நடைபெறும் என்றும், தேர்வுகளின் போது பின்பற்ற வேண்டிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் பின்னர் வெளியிடப்படும் என்றும் அரசு தேர்வுத்துறை இயக்குனர் உஷாராணி அறிவித்துள்ளார்.
பள்ளி மாணவர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று வராமல் இருக்க, அவர்கள் வழிகாட்டு நெறிமுறைகளை சரியாக கடைபிடிக்கிறார்களா என்பதை கண்காணிக்க நான்கு அலுவலர்கள் தலைமையில் மண்டல வாரியாக குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில் இயக்குனர்கள், இணை இயக்குனர்கள் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டு அவர்களுக்கான மாவட்டங்களை ஒதுக்கீடு செய்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தீரஜ்குமார் உத்தரவிட்டுள்ளார்.