சென்னை: பண்டிகை நாட்களில் பொது மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என தமிழ்நாடு சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷணன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், உலக விபத்து விழிப்புணர்வு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன், சென்னை காவல்துறை ஆணையர் மகேஷ் குமார் அகர்வால், காவல்துறை உயர் அலுவலர்கள், மருத்துவர்கள் பங்கேற்று, சாலை விதிகளை பின்பற்றுவோம் என்ற உறுதிமொழியை ஏற்றனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தற்போது குறைந்து வருவது சற்று ஆறுதல் அளிக்கிறது. பொதுமக்கள் இதனால் அலட்சியமாக இருக்கக் கூடாது என்றார்.
மேலும், பல்வேறு மாநிலங்களில் பண்டிகை நாட்களுக்கு பிறகு பாதிப்பு எண்ணிக்கை அதிகமானதால், பொதுமக்கள் விழிப்புடன் இருந்து தங்களை காத்துக் கொள்ள வேண்டும் என்றார். அதேபோல் பண்டிகை நாட்களில் பொருள்களை வாங்கச் செல்லும் போது கவனமுடன் இருக்க வேண்டும். இதுகுறித்து வணிகர்களிடம் குறிப்பிட்ட நேரத்தில் விற்பனை செய்ய ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக கூறினார்.
உலக விபத்து விழிப்புணர்வு நாள் நிகழ்ச்சி அதன்பின் பேசிய மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், சென்னையில் விபத்துகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும், 2019ஆம் ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு 50 விழுக்காடு விபத்துகள் குறைந்து இருப்பதாக தெரிவித்தார். மேலும் சாலை விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.