சீனாவில் கரோனா எனப்படும் ஆட்கொல்லி வைரஸ் நோய் பரவி ஏராளமானோர் பலியாகியுள்ளனர். இதையடுத்து கரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான சீனா உள்ளிட்ட 5 நாடுகளிலிருந்து வரும் பயணிகளை தீவிரமாக கண்காணிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னைக்கு சீனாவிலிருந்து நேரிடையாக விமான சேவை இல்லாததால், ஹாங்காங்கில் இருந்து நள்ளிரவு 1.30 மணிக்கு சென்னை வரும் விமானப் பயணிகளை கண்காணிக்க, பன்னாட்டு விமான நிலைய வருகை முனையத்தில் தனியாக மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்யப்பட்டுள்ள நோய் தடுப்பு ஏற்பாடுகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆகியவற்றை தமிழ்நாடு சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ் இன்று ஆய்வு செய்தார். அவருடன் விமான நிலைய ஆணையரக இயக்குநர் (பொறுப்பு) தீபக், பொது சுகாதாரத் துறை இயக்குநர் குழந்தைசாமி, குடியுரிமை அலுவலர்கள் உள்ளிட்டோர் ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது, விமானத்திலிருந்து பயணிகள் இறங்கியதும், அவர்கள் கை வைக்கும் இடங்களை சுத்தம் செய்ய வேண்டுமெனவும், அனைவருக்கும் முக கவசம் வழங்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க விமான நிலையத்தில் ஆய்வு செய்யப்பட்டது. சீனா மற்றும் சீனாவிலிருந்து பிற நாடுகள் வழியாக வரும்போது, விமானத்திலேயே பயணிகளிடம் சுய கடிதம் தரப்படும். அக்கடிதத்தில் நோய் அறிகுறியான காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல் இருக்கிறதா என்பதை பயணிகள் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளோம். சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்காக தனியாக 10 குடியுரிமைச் சோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குடியுரிமை அலுவலர்கள் உள்பட விமான நிலைய அலுவலர்களுக்கு கரோனா வைரஸ் நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.