சென்னையில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் தனியார் மருத்துவர்களுக்கு கரோனா வைரஸ் தொடர்பான பயிற்சி அளிக்கப்பட்டது. இந்தப் பயிற்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், பொது சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி ஆகியோர் பங்கேற்று அறிவுரை வழங்கினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் பீலா ராஜேஷ், ”கரோனா வைரஸ் குறித்து கடந்த மாதம் 18ஆம் தேதி முதல் கண்காணிக்கப்பட்டு, பல்வேறு வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலியாக சீனர்களுக்கு வழங்கப்பட்ட விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. விமானம் மூலம் தமிழகம் வந்த 15,000 பயணிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டு, அவர்களில் 1,351 பயணிகள் தொடர் கண்காணிப்பில் உள்ளனர். 11 பேர் மருத்துவமனையில் தனி அறையில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.