இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் வெளியிட்டுள்ள அரசாணையில், ”கரோனா தொற்றை உலக சுகாதார நிறுவனம் பெரும் தொற்றாக அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
நோய் தொற்று ஏற்பட்டுள்ளவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்குத் தேவையான வசதிகள் அனைத்தும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் செய்யப்பட்டுள்ளன. மேலும், தமிழ்நாட்டில் போதுமான அளவிற்கு பரிசோதனை மையங்கள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் தனியார் ஆய்வகங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மாநிலத்தில் இறப்பு ஒரு சதவீதத்திற்குள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் ஏற்கனவே சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்கள் இருக்கும் 50 வயதிற்கு மேற்பட்டவர்களே இறக்கின்றனர்.