தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய தடை!

சென்னை: கரோனா சிகிச்சைக்கு அனுமதி அளிக்கப்பட்ட மருத்துவமனைகளில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள தடைவிதித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் உத்தரவிட்டுள்ளார்.

vijayabaskar
vijayabaskar

By

Published : Jun 3, 2020, 5:21 PM IST

கரோனாவால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து, உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை திட்டம் மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. எனினும், நோயாளிகளின் தேவையைக் கருத்தில்கொண்டு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை திட்டத்தை சில நிபந்தனைகளோடு மீண்டும் செயல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, இத்திட்டத்தின்கீழ் உடல் உறுப்பை நன்கொடை மூலம் பெறும், உடல் உறுப்பு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளும் மருத்துவமனைகள் கடைப்பிடிக்க வேண்டிய விரிவான வழிமுறைகளை, மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி,

  • உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை திட்டத்தை கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்ட மருத்துவமனைகளில் செயல்படுத்தக் கூடாது.
  • கரோனா சிகிச்சை அளிக்கப்படாத மருத்துவமனைகளில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையாளர்களுக்குத் தனி பாதை அமைக்க வேண்டும்.
  • உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கென தனிப்பிரிவுகள், தீவிர சிகிச்சைப் பிரிவு, அறுவை அரங்கம் அமைக்க வேண்டும்.
  • மூளைச்சாவு அடைந்த நன்கொடையாளர் மற்ற பொது நோயாளிகள், சந்தேகத்திற்கிடமான கரோனா நோயாளிகளுடன் ஒரே தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கக்கூடாது.
  • உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான மருத்துவ வல்லுநர்கள், ஆலோசகர்கள், செவிலியர், அறுவை அரங்கத்தில் பணியாற்றும் நபர்கள், தூய்மைப் பணியாளர்கள் குழுவை இத்திட்டத்திற்கு பிரத்யேகமாகப் பயன்படுத்த வேண்டும்.
  • இக்குழுவினரை குறிப்பிட்ட கால இடைவெளியில் கரோனா பரிசோதனைக்குள்படுத்த வேண்டும்.
  • முழு உடல் கவசம், கிருமி நாசினிகள், கை சுத்தம் செய்யும் திரவங்கள் ஆகியவை நோயாளி, உடனாளர்களுக்கு உரிய அளவு கிடைக்க செய்ய வேண்டும்.

மேலும், கொடையாளர்கள், அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ள நோயாளிகள் பின்பற்ற வேண்டிய விரிவான நடைமுறைகளும் அரசால் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த வழிகாட்டுதல்கள் முறையாகப் பின்பற்றப்படுவது உடல் உறுப்பு மாற்று ஆணையத்தால் கண்காணிக்கப்படும் எனவும் அமைச்சர் விஜய பாஸ்கர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: கிருமிநாசினி தெளிக்கும் இருசக்கர வாகனங்களைத் தொடங்கிவைத்த முதலமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details