சென்னை: நீட் தேர்வை ரத்துசெய்ய இன்று (ஜனவரி 8) தலைமைச் செயலகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்தது. அக்கூட்டத்தில் அனைத்துக் கட்சிகளும் கலந்துகொண்டன. அதில் பங்கேற்ற பின்னர் மா. சுப்பிரமணியன் செய்தியாளரிடம் பேட்டி அளித்தார்.
பேட்டியின்போது அவர், அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளைக் கொண்டு மீண்டும் ஆளுநர், உள் துறை அமைச்சரைச் சந்திக்கத் திட்டம் இருப்பதாகவும், நீட் தேர்வை எதிர்க்கும் மாநிலங்களை ஒருங்கிணைக்கவும் முடிவுசெய்துள்ளதாகவும் கூறினார்.
13 அரசியல் கட்சிகளுக்கு அழைப்புவிடுக்கப்பட்டு 13 கட்சிகளின் பிரதிநிதிகளும் தங்கள் கருத்துகளை முன்வைத்துள்ளனர். மத்திய அரசு கொண்டுவந்த தேசிய மருத்துவ ஆணைய சட்டம் நமது மாணவர்களைப் பெருமளவு பாதித்துள்ளது.
மத்திய அரசு மாநில அரசு மீது திணித்துள்ள நீட் தேர்வு மாநில சுயாட்சிக்கு எதிரானது. பள்ளிக் கல்வி அமைப்பையே அர்த்தமற்றதாக்கும் இந்த நீட் தேர்வு கூட்டாட்சித் தத்துவத்தைச் சிதைப்பதாக உள்ளது.
ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை
கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட சட்ட முன்வடிவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காதது இந்திய நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது. உள் துறை அமைச்சரைச் சந்திக்க நேரம் கோரியும் அவர் நேரம் அளிக்காதது மக்கள் ஆட்சி மாண்புகளுக்கு எதிரானது எனச் சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு ஏற்பாடுசெய்தார்.
நீட் தேர்வை முழுமையாக நீக்கிட தமிழ்நாடு சட்டப்பேரவையில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து சட்ட ரீதியான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. சட்ட ரீதியான ஏற்பாடு எம்மாதிரியானது என்பது சட்ட வல்லுநர்களோடு ஆலோசித்து முடிவுசெய்யப்படும்.