சென்னை: தமிழ்நாட்டில் ஆளும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு இன்று (ஏப்ரல் 14) மாலை ஆளுநர் ஆர்.என்.ரவி நடத்திய தேநீர் விருந்தை புறக்கணித்த நிலையில் எதிர்க்கட்சியான அதிமுக மற்றும் பாஜக கட்சிகளின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும் பாமகவைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்களும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
முன்னதாக ஆளுநர் மாளிகையில் பாரதியார் சிலையை ரவி திறந்து வைத்தார். அதிமுகவின் சார்பில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி. வேலுமணி, தளவாய்சுந்தரம் மற்றும் சி. விஜயபாஸ்கர் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டனர்.
இதேபோல பாஜகவின் சட்டப்பேரவைத்தலைவர் வானதி சீனிவாசன் மற்றும் மத்திய இணை அமைச்சர் எல்.கே. முருகன் மற்றும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அரசின் சார்பாக உயர் அதிகாரிகள் மற்றும் எந்த அலுவலர்களும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. திமுகவின் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், விசிக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக ஆளுநர் மாளிகை நிகழ்ச்சியைப் புறக்கணித்துவிட்டனர்.
இன்று காலை ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ரவியை திமுக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மா. சுப்பிரமணியன் சந்தித்தனர். பிறகு பேசிய அமைச்சர்கள், நீட் விலக்கு உட்படச் சட்டப்பேரவையில் நிறைவேற்றிய முக்கிய மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் வைத்துள்ளதால் ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் முதலமைச்சர், அமைச்சர்கள் பங்கேற்கமாட்டார்கள் எனத் தெரிவித்தனர்.
ஆளுநரின் "மக்களின் நலனுக்கு எதிரான ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு" எதிராக தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய விரும்புவதாக இந்தக் கட்சிகள் தெரிவித்துள்ளன.
இதையும் படிங்க:அம்பேத்கரின் 132ஆவது பிறந்தநாள்: அரசியல் கட்சித்தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை