வருமானவரித் துறை மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் தனது அன்றாட செயல்திறனை மேம்படுத்தும் வகையில், 2012ஆம் ஆண்டு முதல் புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய மின்னணு நீதிமன்றங்களை பல்வேறு மாநிலங்களில் திறந்துவருகிறது.
அதன்படி டெல்லி, மும்பை, நாக்பூர், அகமதாபாத் ஆகிய நகரங்களில் காணொலிக் காட்சி மூலமாக மின்னணு நீதிமன்றங்கள் செயல்படுத்தப்பட்டுவருகின்றன. இந்நிலையில், சென்னை பெசன்ட் நகர், ராஜாஜி பவனில் உள்ள வருமானவரித் துறை மேல்முறையீட்டுத் தீர்ப்பாய அலுவலகத்தில் இணையவழி காணொலிக் காட்சி வசதியுடன் கூடிய புதிய நீதிமன்ற அறை உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஈ- கோர்ட் திறப்பு இந்தப் புதிய மின்னணு நீதிமன்றத்தைச் சென்னை வருமானவரித் துறை மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் தலைவர், நீதியரசர் பிபி. பட் திறந்துவைத்தார். இந்த மின்னணு நீதிமன்றங்கள் மூலமாகத் தமிழ்நாடு, புதுச்சேரியில் நிலுவையிலுள்ள 5,200 வழக்குகள் காணொலிக் காட்சி மூலமாகவே, பல்வேறு மாவட்டங்களிலும் உள்ள மனுதாரர்கள் தங்களது வழக்கறிஞர்களுடன் ஆஜராகித் தீர்வு பெற முடியும்.
இவ்வகை மின்னணு நீதிமன்றங்கள் மூலம், நிலுவையிலுள்ள பல வழக்குகளுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: என் மகளுக்கு நேர்ந்த கதி யாருக்கும் நேரக்கூடாது - பாத்திமாவின் தந்தை