விநாயகர் சதுர்த்தி இன்று நாடு முழுவதும் கோலாகலமாககொண்டாடப்பட்டது. இவ்விழா தமிழ்நாட்டிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. விநாயகருக்குப் பிடித்த கொழுக்கட்டை, சுண்டல், இனிப்பு வகைகள், பழங்கள் உள்ளிட்டவை படைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. விநாயகரை வழிபடக் காலையிலே மக்கள் அழகழகான களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் வாங்கிச் சென்று வழிபட்டனர்.
கும்பகோணத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் உள்ள தனியார் பள்ளி மாணவர்கள், விநாயகர் வேடமிட்டு ஆடிப்பாடி இவ்விழாவைக் கொண்டாடி மகிழ்ந்தனர். தொடர்ந்து விநாயகர் சிறப்பை விளக்கும் பாடல்களுக்குப் பரதநாட்டியமும், மாணவர்கள் நடனம் ஆடியும் விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
திருவள்ளூரில் இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்புகள் மிக பிரமாண்டமான விநாயகர் சிலைகளை வீரராகவர் கோவில் பின்புறம் வைத்துள்ளனர். மக்கள் கூடும் இடங்களில் அதிக அளவில் விநாயகர் சிலைகள் விநாயகருக்குப் படையல் செய்ய வேண்டிய மங்கலப் பொருட்களின் விற்பனை அமோகமாக இருந்தது. விநாயகர் பூஜைக்குப் பிரதானமான வாழைப்பழத்தின் விலை உயர்வால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி நீலகிரி, குன்னூரில் 1,008 விநாயகர் சிலைகள் வைத்து 1,008 முறை வேத மந்திரங்கள் ஓதி சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. இதில் 300க்கும் மேற்பட்ட சிறுவர் முதல் பெரியவர்கள் வரை பங்கேற்று வழிபாடு நடத்தினர். இதில் நீலகிரி மாவட்டம் மட்டுமின்றி கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.