தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தாயகம் வந்தடைந்த இலங்கையில் விடுதலைசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள்! - all fisherman send to their native

இலங்கைக் கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவா்கள் 9 போ், மத்திய அரசு, தமிழ்நாடு அரசு முயற்சியால் விடுவிக்கப்பட்டு, 59 நாள்களுக்கு பின்பு, இலங்கையிலிருந்து விமானத்தில் இன்று (பிப்ரவரி 10)அதிகாலை சென்னை வந்தடைந்தனர்.

இலங்கையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் தமிழ்நாடு வந்தடைந்தனர்!
இலங்கையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் தமிழ்நாடு வந்தடைந்தனர்!

By

Published : Feb 10, 2022, 2:54 PM IST

Updated : Feb 10, 2022, 5:05 PM IST

சென்னை:தமிழ்நாட்டில் ராமேஸ்வரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் இயந்திரப் படகுகளில் 2021 டிசம்பர் மாதம் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது டிசம்பர் 18ஆம் தேதி இலங்கைக் கடற்படையினர் தமிழ்நாடு மீனவர்களைச் சுற்றிவளைத்துப் பிடித்து, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் குற்றச்சாட்டைக் கூறி, அவர்களைக் கைதுசெய்தனர்.

அதைப்போல் மறுநாளும் தமிழ்நாடு மீனவர்களைக் கைதுசெய்தனர். அடுத்தடுத்து இரண்டு நாள்களில் ராமேஸ்வரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மாவட்டங்களைச் சேர்ந்த 54 மீனவர்களைக் கைதுசெய்து அவர்கள் படகுகள், பிடித்த மீன்கள், மீன்பிடி சாதனங்கள் ஆகியவற்றைப் பறிமுதல்செய்து இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

அடுத்தடுத்து இரண்டு நாள்களில் இலங்கைக் கடற்படையினர், தமிழ்நாடு மீனவர்கள் 54 பேரை ஒட்டுமொத்தமாகக் கைதுசெய்த சம்பவம் மீனவர் குடும்பங்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மீனவர்களை விடுவிக்கக் கோரி தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்குக் கோரிக்கைவிடுத்தனர்.

இந்தியத் தூதரகத்திடம் மீனவர்கள் ஒப்படைப்பு!

இதையடுத்து தமிழ்நாடு அரசு, வெளியுறவுத் துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதியது. உடனடியாக மத்திய அரசும், தமிழ்நாடு மீனவர்கள் விடுதலைக்காக நடவடிக்கை எடுத்தது. இந்நிலையில் கடந்த ஜனவரி 2ஆம் வாரத்தில் மீனவர்கள் 54 பேரையும் இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்தது. அவர்கள் இலங்கையில் உள்ள இந்தியத் தூதரக அலுவலர்களின் கட்டுப்பாட்டில் ஒப்படைக்கப்பட்டனர்.

தமிழ்நாடு மீனவர்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்து, இந்தியாவுக்கு அனுப்ப இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருந்தது.

இந்நிலையில் தமிழ்நாடு மீனவர்கள் பலருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருந்தது பரிசோதனையில் தெரியவந்தது. அதனால் அவர்களை உடனடியாக இந்தியாவுக்கு அனுப்பிவைக்க முடியவில்லை. கரோனா பாதிப்பிற்குள்ளான மீனவர்களுக்கு இலங்கையில் சிகிச்சை அளிக்கப்படு அவர்களுடன் தொடர்பிலிருந்த மற்ற மீனவர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர்.

மீனவ குடும்பத்தினர் போராட்டம்

இதற்கிடையே மீனவர்களின் குடும்பத்தினர், கடந்த சனிக்கிழமை ராமேஸ்வரத்தில் உள்ள மீன்வளத் துறை அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர். இலங்கை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட மீனவர்களை உடனடியாகத் தமிழ்நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். மீன்வளத் துறை அலுவலர்கள், அவர்களைச் சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனர்.

தமிழ்நாடு அரசும் மத்திய அரசுக்குத் தகவல் தெரிவித்து மீனவர்களைத் தமிழ்நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைவிடுத்தது.

தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று, இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம், கரோனா வைரஸ் பாதிப்பு இல்லாத ராமேஸ்வரம் மீனவர்கள் மரியஸ்மைல்சன், சங்கர், சக்திவேல், மலையன், எட்வர்ட் ஹென்றி, ஜெயகணேஷ் உள்பட 6 போ், புதுக்கோட்டை மீனவர்கள் சந்தோஷ், பிரதீப், வீரபாண்டி உள்பட 3 போ் ஆகிய மொத்தமாக 9 மீனவர்களை விமானம் மூலம் இலங்கையிலிருந்து சென்னை வந்தடைந்தனர்.

வந்தே பாரத் மிஷின் இந்தியா விமானத்தில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு 9 மீனவர்கள் சென்னை வந்து சேர்ந்தனர். மீனவர்களுக்கு கடவுச்சீட்டு இல்லாததால், இந்தியத் தூதரகம் எமா்ஜென்சி சா்டிபிகெட் வழங்கி அனுப்பிவைத்தது.

கரோனா பாதிப்பு குணமடைந்ததும் ஏனைய மீனவர்கள்

சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு மீன்வளத் துறை அலுவலர்கள், மீனவர்களை தமிழ்நாடு அரசு சார்பில் வரவேற்றனர். அதன்பின்பு ராமேஸ்வரத்திலிருந்து வந்திருந்த மீன்வளத் துறை அலுவலர்கள் ஒன்பது மீனவர்களையும் தனி வேனில் மீனவர்களை, அவா்களுடைய சொந்த ஊர்களில் ஒப்படைக்க அழைத்துச் சென்றனர்.

இலங்கையில் இந்தியத் தூதரக பராமரிப்பில் இருக்கும் மேலும் 45 மீனவர்களுக்கும் கரோனா பாதிப்பு முழுமையாக நீங்கிய பின்பு, படிப்படியாகத் தமிழ்நாட்டிற்கு அழைத்துவரப்படுவார்கள் என்று அலுவலர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:114 புதிய பாலங்கள் - தமிழ்நாடு அரசு அனுமதி!

Last Updated : Feb 10, 2022, 5:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details