அத்துறை வெளியிட்டுள்ள விளக்கக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளவை:
சென்னை-கன்னியாகுமரி தொழிற்தட திட்டமானது மத்திய அரசு, ஆசிய வளர்ச்சி வங்கி ஆகியவற்றின் உதவி மூலம் செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் கடலூர்-நாகை, அரியலூர்-பெரம்பலூர், திருச்சி-புதுக்கோட்டை-சிவகங்கை, மதுரை-திண்டுக்கல்-விருதுநகர்-தேனி, ராமநாதபுரம், தூத்துக்குடி-திருநெல்வேலி ஆகிய ஆறு தொழில் முனையங்கள் உருவாக்கப்படுகின்றன.
பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கான இந்தத் திட்டமானது 13 கடலோர மாவட்டங்கள், 11 உள் மாவட்டங்கள் என 24 மாவட்டங்களை உள்ளடக்கியதாக உள்ளது.
இந்தத் திட்டத்தில் சாலை உள்கட்டமைப்பு வசதியின் கீழ் 4,318 கிமீ தேசிய நெடுஞ்சாலை, 3,729 கிமீ மாநில நெடுஞ்சாலை என மொத்தம் 8,047 கிமீ சாலையை ஆறு கட்டங்களாக மேம்படுத்தப்படவுள்ளன. முதற்கட்டமாக 20 மாவட்டங்களில் 15 முக்கிய இணைப்புச் சாலைகள் மேம்படுத்தப்பட உள்ளன.