மத்திய உள்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டுத்துறை சார்பாக கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி முதல் நேற்று வரை நடைபெற்ற 12ஆவது பழங்குடி இளையோர் பரிமாற்ற நிகழ்ச்சியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை அடையாறில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், மத்திய ரிசர்வ் காவல் படையின் இயக்குநர், சோனல் மிஸ்ரா ஆகியோர் கலந்துகொண்டு வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், ”ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு காரணமாக இருப்பது இளைஞர் சக்திதான். புதிய சிந்தனைகள், திறமைகள், அயராத உழைப்பு, செயலாற்றல், மன வலிமை என எண்ணற்ற பரிமாணங்களை கொண்டவர்களாக இளைஞர்கள் திகழ்கின்றனர். குறிப்பாக பழங்குடியின இளைஞர்களின் திறன் மிகவும் அளப்பரியது. அவற்றை நாட்டிற்கு பயன்படுத்த வேண்டியது ஆட்சியாளர்களின் கடமை.