நாடு விடுதலைப் பெற்ற பிறகு மொழிவாரி மாகாணம் அமைக்க மறுத்த நிலையில், மொழிவாரி மாநிலங்கள் அமைவதுதான் தேசிய இனங்களின் தனித்தன்மையை பாதுகாக்கும் என்றும், அனைத்து மொழிகளும் சமச்சீரான வளர்ச்சி அடைய வாய்ப்பளிக்கும் என்றும், இந்தியாவின் ஒருமைப்பாடு பாதுகாக்கப்படும் என்றும் நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்தன.
தமிழ்நாடு தமிழருக்கே:
ம.பொ.சிவஞானத்தின்(ம.பொ.சி.) தமிழரசுக் கழகம், தியாகி சங்கரலிங்கனார், நேசமணி போன்ற பல தலைவர்களின் தீவிரமான போராட்டம், தந்தை பெரியாரின் “தமிழ்நாடு தமிழருக்கே” என்ற பரப்புரை ஆகியவையே இன்றைய தமிழ்நாடு உருவாக காரணம்.
சிலம்பு செல்வர் ம.பொ.சிவஞானம் 1954ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் முதலமைச்சராக பெருந்தலைவர் காமராஜர் பதவிக்கு வந்தார். அதன்பின்னர் 1956ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி, மொழிவாரி மாகாணங்கள் பிரிக்கப்பட்டன. அப்போது நாட்டில் 16 மாகாணங்கள், மூன்று யூனியன் பிரதேசங்கள் இருந்தது. இந்திய விடுதலைக்கு முன்னரே, இதற்கான குரல்கள் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்து விட்டன. மொழிவாரி மாகாணம்:
மொழிவாரி மாகாணமாக பிரிக்கப்பட்ட முதல் மாநிலம் ஓடிசா தான். மதுசூதன்தாஸ் தலைமையில் மிகப்பெரிய போராட்டம் நடத்தி வங்கத்திடம் இருந்து ஒடிசா, பீகார் உள்ளிட்ட மாநிலங்கள் பிரிக்கப்பட்டன.
அந்த வகையில், 1912ஆம் ஆண்டு ஒடிசா-பீகார் மாகாணம் உருவாக்கப்பட்டது. தொடர்ந்து 1935ஆம் ஆண்டு ஒடிசா தனி மாநிலமாக உருவானது.
இதையடுத்து தற்போதைய தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம் ஆகிய மாநிலங்கள் ஒன்றாக இருந்த “மெட்ராஸ் ராஜஸ்தானி”யை பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது.
தெலுங்கு பேசும் மக்களுக்கு தனி மாநிலம் வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஸ்ரீராமலு என்பவர் காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கி உயிர் நீத்தார்.
கோரிக்கை:
அவரது மறைவால் வெடித்த வன்முறையை தொடர்ந்து, 1953ஆம் ஆண்டு ஆந்திரா மாநிலம் உதயமானது. இதையடுத்து பசல் அலி, எம்.பணிக்கர், ஹெச்.என். குன்ஸ்ரு தலைமையில் மொழிவாரி மாகாணங்கள் அமைக்க குழு அமைக்கப்பட்டது.
இந்த குழு இரண்டு ஆண்டுகள் ஆய்வு நடத்தி அறிக்கையை அரசிடம் சமர்பித்தது. முன்னதாக தந்தை பெரியார், காமராஜர், சிலம்பு செல்வர் ம.பொ.சி, மார்ஷல் நேசமணி, தியாகி சங்கரலிங்கனார், பொதுவுடைமை தோழர் ஜீவா, பேரறிஞர் அண்ணா உள்ளிட்ட தலைவர்களும் தனிமாநில கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தினார்கள்.
சங்கரலிங்கனார் உண்ணாவிரதம்:
தியாகி சங்கரலிங்கனார் ஜூலை 27ஆம் தேதி சூலக்கரை மேட்டில் தனியாளாக உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். சங்கரலிங்கனாரின் உண்ணாவிரதம் பல சலசலப்புகளை ஏற்படுத்திய நிலையில், ம.பொ.சி., ஜீவானந்தம், அண்ணாதுரை, காமராஜர் என பல தலைவர்கள் உண்ணாவிரதத்தை கைவிடச் சொல்லிக் கோரிக்கை விடுத்தனர்.
எனினும் அவர் உண்ணாவிரத்தை கைவிடவில்லை. நாளாக நாளாகச் சங்கரலிங்கனாரின் உடல்நிலை மோசமானது. 75 நாட்கள் தொடர் உண்ணாவிரதம், அவரது உடல் மறைவோடு நிறைவு பெற்றது. சங்கரலிங்கனாரின் முழக்கப்படி, சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு என பெயர் சூட்ட வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்தது. பல இயக்கங்கள் இக்கோரிக்கையை முன்வைத்தன. இதையடுத்து 1962ஆம் ஆண்டு இதற்கான மசோதா வந்த போது அது தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து கொண்டுவரப்பட்ட 1964ஆம் ஆண்டு மசோதாவும் வெற்றி பெறவில்லை. தமிழ்நாடு:
இந்நிலையில் பேரறிஞர் அண்ணா தலைமையிலான திமுக அரசு, 1968ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் தேதி தமிழ்நாடு தீர்மானத்தை கொண்டு வந்தது. இந்த மசோதா அடுத்தாண்டு நவம்பர் 23ஆம் தேதி (1969) நிறைவேறியது. இதையடுத்து தமிழ்நாடு மாநிலம் உருவானது. அப்போது சங்கரலிங்கனாரின் தியாகத்தை போற்றும் விதமாக அவருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
தந்தை பெரியாருடன் பேரறிஞர் அண்ணா மொழிவாரி மாகாணமாக தமிழ்நாடு உருவாக்கப்பட்ட போது, தமிழ்நாட்டின் சில பகுதிகளை நாம் இழந்துள்ளோம். தமிழ் மொழி பேசுபவர்கள் அதிகம் வாழும் பகுதியான சித்தூர், திருப்பதி உள்ளிட்ட பகுதிகளை நாம் இழந்தோம். இதனால்தான் இன்றைக்கு ஏற்பட்டுள்ள பாலாறு, பொன்னையாறு, பழவேற்காடு ஏரி பிரச்னைகள் தீர்க்க முடியாமல் இருக்கின்றன. திருத்தணி- திருப்பதி:
ம.பொ.சி-யின் தீவிரப் போராட்டத்தால் திருத்தணியைப் பெற்றோம். இல்லையெனில், திருத்தணியும் இன்றைக்கு ஆந்திராவிடம் தான் இருந்திருக்கும். கேரளத்திடம் தேவிகுளம், பீர்மேடு, நெய்யாற்றங்கரை, நெடுமாங்காடு, பாலக்காடு போன்ற பகுதிகளை இழந்தோம். கர்நாடகத்திடம் `வெங்காலூர்' என்று அழைக்கப்பட்ட பெங்களூரு, கோலார், தங்கவயல் போன்ற பல பகுதிகளையும் நாம் இழந்துள்ளோம்.
கேரளத்திடம் இழந்த பகுதியால் முல்லைப் பெரியாறு, நெய்யாறு, ஆழியாறு – பரம்பிக்குளம் போன்ற நீர் ஆதாரங்களை இழந்தோம். கன்னியாகுமரியும் கூட நம்மைவிட்டு பிரிந்திருக்கும். 11 தியாகிகளின் ரத்தத்தில் தமிழ்நாட்டோடு இணைந்ததுதான் குமரி மாவட்டம். இது மார்ஷல் நேசமணியின் போராட்டத்தால் தக்கவைக்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில் தியாகி கரையாளருடைய மாசற்ற தியாகத்தால் செங்கோட்டை கிடைத்தது. கொண்டாட்டம்:
1956 நவம்பர் 1ஆம் தேதி உதயமான கேரளம் "நவ கேரளம்" என்று கொண்டாடுகிறது. கர்நாடகம் "அகண்ட கர்நாடகம்" என்று விழா எடுக்கிறது. ஆந்திரம் "விசால ஆந்திரம்" என்று ராஜ்ய விழாவாக கொண்டாடுகின்றது. மகாராஷ்டிரம் "சம்யுக்த மகாராஷ்டிரம்", குஜராத் "மகா குஜராத்" என்று நவம்பர் 1ஆம் தேதியை மகிழ்ச்சிப் பெறுக்கோடு வரவேற்கின்றது.
ஆனால் நாம், கிடைத்ததை வைத்து கொண்டாடுவதா? அல்லது இழந்ததை நினைத்து மனம் வெம்புவதா என்று தெரியாமல் இருதலைக் கொல்லியாக இருந்தோம். தற்போது தமிழ்நாடு அரசு, இவ்விழாவை அரசு விழாவாக முதல்முறையாக கொண்டாடுவது சிறப்பு. இது தொடரட்டும். சங்கரலிங்கனார் போன்ற பல தியாகிகளின் உயிர் தியாகத்தால் கிடைக்கப்பெற்ற தமிழ்நாடு வாழிய வாழியவே.!
இதையும் படிங்க: தமிழ்நாடு நாள் இன்று கொண்டாட்டம்!